Nelson dilipkumar: ஜெயிலர் 2 படம் எடுக்க திட்டம்.. நெல்சனின் வேற லெவல் ப்ளான்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்களை கொண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் ஜெயிலர்.
படத்தில் சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, வசந்த் ரவி உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 340 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசூல் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தை இயக்க திட்டமிடும் நெல்சன்: அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சன் பிக்சர்சுடன் இணைந்துள்ள படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்திற்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. இதையொட்டி படத்தின் வசூலும் எகிறியுள்ளது. கடந்த 5 நாட்களில் இந்தப் படம் 340 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் தன்னுடைய மகன், கடத்தி கொலை செய்யப்பட்டதாக தெரியவரும் நிலையில், ரிடையர்ட் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் அதிரடியை கதைக்களமாக இந்தப் படம் கொண்டுள்ளது. ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன் குறித்த உண்மை தெரியவரும் நிலையில், உடைந்துப்போகும் காட்சிகளில் ரஜினிகாந்த் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். இந்தக் காட்சிகளின்மூலம் ரஜினிக்குள் இருக்கும் நடிகனையும் ரசிகர்கள் உணர முடிகிறது.
ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன. காவாலா பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை தாண்டி அதிரடி கிளப்பி வருகிறது. மற்ற பாடல்களும் ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளன. படையப்பா படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். முன்னதாக இந்த ஜோடி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படத்தில் சிறப்பாகவே அமைந்தது.
இந்தப் படத்தின் வெற்றியால் தற்போது நெல்சன் உற்சாகமடைந்துள்ளார். அடுத்ததாக அவர் எந்த நடிகருடன் இணைவார் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், ஜெயிலர் 2 படத்தை இயக்கும் ஆசை தனக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெயிலர் மட்டுமின்றி, தான் இயக்கிய மற்ற படங்களின் இரண்டாவது பாகங்களை இயக்கும் எண்ணமும் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரும் மாஸ் ஸ்டார்கள் என்றும் இவர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்கவும் தான் திட்டமிட்டுள்ளதாகவும் சரியான நேரம் அமைந்தால், தனது இந்த விருப்பம் நிறைவேறும் என்றும் கூறியுள்ளார். விஜய்யுடன் நெல்சன் இணைந்திருந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் சமூக வலைதளங்ளில் அதிகமான ட்ரோல்களில் சிக்கினார் நெல்சன். இந்நிலையில் ஜெயிலர் படம் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து அவர் பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











