Nelson Dilipkumar Wife: பொய் சொல்லாதீங்க.. நான் யாருக்கும் பணம் அனுப்பல.. நெல்சனின் மனைவி விளக்கம்!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் கே. ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவர் புதிதாக கட்டி வந்த வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக முதற்கட்டமாக 8 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறை தரப்பில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது.
இதனால் நெல்சனின் மனைவி மோனிஷாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது. இதுதொடர்பாக நெல்சனின் மனைவி மோனிஷா விளக்கம் கொடுத்துள்ளார். மோனிஷாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் சென்றுள்ளது எனவும் இந்தப் பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா எனவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது என செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என நெல்சனின் மனைவி மோனிஷா நெல்சன் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் நெல்சனின் மனைவி மோனிஷா தரப்பில் இருந்து அவரது வக்கீல் மூலம் விளக்கம் ஒன்று அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்.

விளக்கம்: அதில், " மோனிஷா நெல்சன் திலீப்குமார் அறிவுறுத்தலின் பேரில் இந்த பொது அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்படி எங்களது கட்சிக்காரர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி ஆவார். நெல்சன் திலீப்குமார் முக்கிய இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். அவரை பற்றி பல ஆன்லைன் தளங்கள், செய்தி தளங்கள், பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் சினிமா தளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் புகாரளிக்கும் வகையில் எனது கட்சிக்காரரை பற்றிய தொடர் செய்திகள் நேர்காணல்கள் மற்றும் செய்தி வீடியோக்கள் வெளியாகின்றன.
ஆகஸ்ட் 7: கடந்த ஆகஸ்ட் 07ம் தேதி அன்று, வழக்கறிஞர் கிருஷ்ணன் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, எனது கட்சிக்காரரான மோனிஷா நெல்சனை காவல்துறையினர் அழைத்து போலீசார் விசாரித்தனர். எனினும் மோனிஷா நெல்சன் அந்த விவகாரத்தில் போலீசாரிடம் தெளிவுபடுத்தியதோடு, முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுத்தார்.

பொய்: எனது கட்சிக்காரர் மோனிஷா நெல்சனுக்கும் வழக்கறிஞர் கிருஷ்ணனுக்கும் இடையே பணப் பரிவர்த்தனைகள் இருந்ததாக பொய்யாக ஊகித்து வதந்திகள் செய்திகளாக பரவுகிறது. இதனை கண்டு மோனிஷா நெல்சன் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இப்படி பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்பதை மோனிஷா நெல்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு: எனது கட்சிக்காருக்கும் ( மோனிஷா நெல்சன்) அவரது கணவரின் (நெல்சன் திலீப்குமார்) நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், அடிப்படை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று மோனிஷா நெல்சன் கூறியுள்ளார். இதேபோன்று பிறரையும் எனது கட்சிக்காரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை: சம்பந்தப்பட்ட தரப்பினரின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய செய்திகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மோனிஷா நெல்சன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளையும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதனை பின்பற்றாத பட்சத்தில், எனது கட்சிக்காரரின் ( மோனிஷா நெல்சன்) நலன் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











