டாக்டர் படம் 100 கோடி வசூலை குவிக்க இவங்க தான் காரணம்.. லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன நெல்சன்!
சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தியேட்டர்களில் குவித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்த நிலையில், படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் தற்போது ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார்.
இந்த படத்தை நம்பி நடித்த சிவகார்த்திகேயன் முதல் படத்தை திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து ஹிட்டாக்கிய ரசிகர்கள் வரை அனைவருக்கும் நெல்சன் நன்றி கூறியுள்ளார்.

100 கோடி வசூல்
தமிழ் திரையுலகில் சில முன்னணி நடிகர்களே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் டாக்டர் திரைப்படம் மூலமாக 100 கோடி கிளப்பி இணைந்துள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குநர் நெல்சனை நம்பி தன்னை முற்றிலுமாக ஒப்படைத்த சிவகார்த்திகேயனுக்கு மெகா பிளாக்பஸ்டர் படமாக டாக்டர் மாறியுள்ளது.

தடைகளை தாண்டி
கோலமாவு கோகிலா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் பல முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு ஒடிடியா? தியேட்டரா? என்கிற பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா கலவரத்துக்கு நடுவே 50 சதவீதம் தியேட்டர் இருக்கைகளுடன் வெளியாகியே இந்த சாதனையை அசால்ட்டாக செய்துள்ளது.

பெரிய லிஸ்ட்
தயாரிப்பாளராக நடிகராக மற்றும் ஒரு நல்ல நண்பராக என்னை நம்பிய சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். முழு ஒத்துழைப்பை அளித்த அனிருத் குடும்பமாகவே இருந்த பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, மிலிந்த் சோமன், ரெட்டின் கிங்ஸ்லி, அர்ச்சனா, இளவரசு, தீபா மற்றும் இயற்கை எய்திய அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். மேலும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் கேஜேஆர் நிறுவனத்துக்கும் ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நெல்சன் நன்றி தெரிவித்தார்.

டாக்டர் தீபாவளி
திரையரங்குகளில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் 10க்கும் அதிகமான முறை படத்தை பார்த்துள்ளனர். படத்தை பார்க்காத பொதுமக்களும் இந்த தீபாவளியை டாக்டர் தீபாவளியாக கொண்டாடும் வகையில் சன் டிவியில் டாக்டர் திரைப்படம் தீபாவளியன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

பீஸ்ட்டுக்கு வெயிட்டிங்
டாக்டர் திரைப்படத்தை பெரும் வெற்றி அடைய செய்ததில் பங்கு கொண்ட அனைவரையும் குறிப்பிட்டு ஒரு பெரிய லிஸ்டே போட்டு இயக்குநர் நெல்சன் தற்போது வெளியிட்டுள்ள நன்றி ட்வீட் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது. டார்க் காமெடி படங்களை எடுப்பதில் வல்லவராக மாறியுள்ள நெல்சன் அடுத்து தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் என்ன மேஜிக்கை வைத்திருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.


Click it and Unblock the Notifications











