தமிழில் என்ட்ரி ஆகிறாரா ராக்கி பாய்?.. இயக்குநர் யார் தெரியுமா?.. பரபரக்கும் கோலிவுட்
சென்னை: கேஜிஎஃப் படத்தில் நடித்த நடிகர் யாஷை தமிழ் பட இயக்குநர் இயக்கப்போகிறார் என்ற தகவல் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.
களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர் யாஷ். திரையுலகில் நிலைத்து நிற்க பல வருடங்கள் போராடிய யாஷுக்கு எந்த படமும் பிரேக் கொடுக்காமல் இருந்தது. இருப்பினும் தனது விடா முயற்சியை அவர் விடவே இல்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தார். எப்படியாவது திரையுலகில் பெரிய ஸ்டாராக வேண்டுமென்ற வேட்கை அவரிடம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது.

கேஜிஎஃப் மூலம் உருவாக்கிய ராஜ்ஜியம்
இப்படி வேட்கையோடு ஓடிக்கொண்டிருந்த யாஷுக்கு கேஜிஎஃப் படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. பிரசாந்த் நீல் இயக்கிய அந்தப் படம் கோலார் தங்க வயல் பற்றி எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் யாஷின் நடிப்பும், வசன உச்சரிப்பும், உடல்மொழியும் ரசிகர்களை கட்டிப்போட்டன. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. தமிழிலும் அந்தப் படம் டப் செய்யப்பட்டது. கன்னடத்தில் எப்படி பெரும் வெற்றி பெற்றதோ அதேபோல் தமிழிலும் வெற்றி கண்டது. அதன் பிறகு யாஷ் ராக்கி பாயாக மாறினார்.

மாஸ் காட்டிய ராக்கி பாய்
கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு பிறகு யாஷ் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்தப் படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீலே இயக்கினார். இந்த முறை கேஜிஎஃப் பான் இந்தியா படமாக உருவானது. படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்தார். படம் எதிர்பார்த்தபடியே இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெற்றி மட்டுமின்றி பெரும் வசூல் வேட்டையையும் நிகழ்த்தியது. இந்தப் படமானது 1000 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

பீஸ்ட்டை ரோஸ்ட்டாக்கிய கேஜிஎஃப் 2
குறிப்பாக தமிழ்நாட்டில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போது அந்தப் படத்துடன் விஜய் நடித்திருந்த பீஸ்ட் படமும் வெளியானது. பீஸ்ட் படம்தான் வெற்றி பெறும் என பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் யாரும் நினைக்காதவகையில் பீஸ்ட் படத்தை அசால்ட்டாக காலி செய்தது கேஜிஎஃப் 2. இதனால் தமிழ்நாட்டிலும் ராக்கி பாயின் கொடி உயரமாகவே பறந்தது.

நேரடியாக தமிழில் எண்ட்ரி ஆகும் ராக்கி பாய்
இந்நிலையில் நடிகர் யாஷ் நேரடி தமிழ் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, நேரடி தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கும் யாஷ், அதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டுவந்தாராம். தற்போது ஒரு இயக்குநரை இறுதி செய்திருக்கிறாராம்.

ராக்கி பாயை இயக்கப்போகும் இயக்குநர் யார்?
யாஷ் இறுதி செய்திருக்கும் இயக்குநர் மித்ரன் என கூறப்படுகிறது. மித்ரன் கடைசியாக கார்த்தியை வைத்து சர்தார் படத்தை இயக்கினார். தண்ணீர் பிரச்னையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படமானது 100 கோடி ரூபாய் வசூலித்தது. யாஷிடம் மித்ரன் கதை கூறிவிட்டார் எனவும் அந்தக் கதையை கேட்ட யாஷ் இருவரும் நிச்சயம் இணைகிறோம் என உறுதியளித்ததாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











