Vijayakanth - விஜயகாந்த்தை பார்க்ககூட விடவில்லை.. எப்படித்தான் தாங்குகிறார்களோ.. இயக்குநர் பி.வாசு வேதனை
சென்னை: நடிகர் விஜயகாந்த் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து அவரது நினைவுகள் வரிசையாக பிரபலங்கள் பகிர்ந்துவருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் பி.வாசுவும் தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் அவருடனான நினைவுகள் குறித்து பல பிரபலங்கள் பகிர்ந்துவருகின்றனர். அந்தவகையில் விஜயகாந்த்தை வைத்து சேதுபதி ஐபிஎஸ், பொன்மனச்செல்வன் ஆகிய படங்களை இயக்கிய பி.வாசுவும் தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.

முதல் சந்திப்பு: நான் உதவி இயக்குநராக இருந்தபோது விஜயகாந்த்தை முதன்முதலாக சந்தித்தேன். வாகினி ஸ்டூடியோவில் ஒரு படத்தின் ஷூட்டிங்கின்போது பார்த்தேன். பனியன் போட்டுக்கொண்டு கருப்பான உருவம், பளீச்சென்ற சிரிப்பு என விஜயகாந்த் இருந்தார். அவரை பார்க்கும்போது சினிமாவுக்கு ஒரு ஹீரோ வருகிறார் என்று மட்டும் எனக்கு புரிந்தது. அவரை எஸ்.ஏ.சி நல்ல கமர்ஷியல் ஹீரோவாக கொண்டு வந்தார்.
மாஸ் ஹீரோ: அவ்வாறு அவர் மாறிய பிறகு தமிழ் சினிமாவுக்கு மாஸ் ஹீரோவா வந்துவிட்டார் என்று மட்டும் புரிந்தது. எனக்கும் சந்தான பாரதிக்கும் இடையே பிரிவு வந்த பிறகு நான் ஆர்.சுந்தரராஜனுக்கு சில வேலைகள் செய்துகொடுத்தேன். அதில் அம்மன் கோயில் கிழக்காலே படத்துக்காக திரைக்கதை எழுதும் வாய்ப்புப் கிடைத்தது. அதில் ராதாவிடம் சவால் விடும் காட்சியை விஜயகாந்த்துக்காகவே நானும், சுந்தரராஜனும் ஃபீல் செய்து எழுதினோம்.
இயக்கும் வாய்ப்பு: அதற்கு பிறகு விஜயகாந்த்தை வைத்து பொன்மனச்செல்வன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சோக காட்சியில் அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தினார் விஜயகாந்த். அதேபோல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் அவருக்குள் இருந்த திறமை வெளியே வந்தது. அப்படத்தில் மேக்கப் இல்லாமல் ஸ்டைல் இல்லாமல் நடித்திருப்பார். பொன்மனச்செல்வன் படம் ரிலீஸான சமயத்தில் விஜயகாந்த் ஆக்ஷன் ஹீரோவாகவே மாறிவிட்டார். ஆனால் அந்தப் படம் பெரிய ஹிட் ஆகவில்லை. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வெச்ச தங்கக்குடம் பாடல் மட்டும் ஹிட்டடித்தது.
சேதுபதி ஐபிஎஸ்: பிறகுதான் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் விஜயகாந்த்துடன் இணைந்தேன். எனக்கு தெரிந்து ஒருவர்கூட விஜயகாந்த் பற்றி மிகையாக சொல்லவில்லை. மனதில் உள்ளதைத்தான் பேசினார்கள். அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்று பார்த்தேன். சினிமாவை விட்டு அவர் விலகாமல் இருந்திருந்தாலோ அல்லது அரசியலுக்கு வரும்போது உடல்நிலை இப்படி சரியில்லாமல் இருந்திருந்தாலோ விஜயகாந்த் வேறு நிலையில் இருந்திருப்பார். அவருக்கென்று எப்போது தனியிடம் இருக்கிறது.
கஷ்டம்தான்: கடந்த ஒரு வருடமாகவே விஜயகாந்த்தை பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. ஆனால் அவரை வெளியே அதிகம் காட்டாமல் இருந்ததற்கு பிரேமலதாவுக்கு பாராட்டு சொல்ல வேண்டும். ஒருவேளை அவரை நேரில் பார்த்திருந்தால் தொல்லையாக போயிருந்திருக்கும். இத்தனை நாட்கள் இருந்தவருக்கு முன்கூட்டியே ஏதாவது நடந்திருக்கக்கூட வாய்ப்பு உண்டு. எங்களை போன்ற ரசிகர்கள், கலைஞர்கள், கட்சி தொண்டர்களாலேயே தாங்க முடியவில்லையே அவரது குடும்பம் எப்படி தாங்குமோ" என்றார்.


Click it and Unblock the Notifications











