பரிதாபமாக உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ்.. இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.. ஏன்?
சென்னை: ஆஸ்கர் விருதுகளிலேயே இத்தனை வருடங்களாக சண்டை பயிற்சி இயக்குநர்களை ஒரு பொருட்டாக மதிக்காத நிலையில், வரும் ஆண்டு முதல் அவர்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இயக்குநர் ராஜமெளலியும் அதனை வெகுவாக வரவேற்றார். பொதுவாகவே சண்டை பயிற்சி இயக்குநர்களும் ஸ்டண்ட் கலைஞர்களும் தான் தங்கள் உயிரை பணயம் வைத்து பல அடி உயரத்தில் இருந்து குதிப்பது, கார் சேஸிங், பைக் சேஸிங் காட்சிகளில் நடிப்பது என அதிகம் ரிஸ்க் எடுக்கின்றனர்.
ஹீரோக்கள் பெரும்பாலும் டூப் போட்டு நடித்து விட்டு, முகத்தை மட்டுமே க்ளோஸ் அப் ஷாட்டில் காட்டி பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் தான் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை டூப் இல்லாமல் நடித்து வருகின்றனர். நடிகர் அஜித் விடாமுயற்சி படத்துக்காக உயிரை பணயம் வைத்து கார் விபத்து காட்சியில் நடித்ததை பார்த்து ரசிகர்கள் கதிகலங்கி போய்விட்டனர்.

இந்நிலையில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற கோர விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உரிய பாதுகாப்பு இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டது தான் மரணத்துக்கான காரணம் என அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பொழுதுபோக்குக்காக: 200 ரூபாய் டிக்கெட் கொடுத்து படத்தை பார்க்கும் ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக பல ஸ்டண்ட் கலைஞர்கள் தங்கள் முகமே தெரியவில்லை என்றாலும், தங்கள் பெயர் கூட பிரபலம் ஆகாத நிலையிலும், பல முன்னணி நடிகர்கள் ஸ்டண்ட் கலைஞர்களையும் டூப் நடிகர்களையும் வெளிச்சத்திற்கு கூட கொண்டு வரக்கூடாது என நினைக்கும் நிலை உள்ள நிலையிலும், ரசிகர்களின் பொழுதுபோக்குக்காக, படங்கள் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர். மோகன்ராஜ் போல பல ஸ்டண்ட் பயிற்சியாளர்கள் இந்த சினிமாவுக்காக உயிரை விட்டுள்ளனர்.
மோகன்ராஜ் மரணம்: நாகையில் நடைபெற்ற வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது கார் சேஸிங் ஸ்டண்ட் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர் பா. ரஞ்சித். கஷ்டமான ஸ்டண்ட் காட்சியான காரை அதிக உயரத்தில் பறக்கவிட்டு தரையிறங்கும் காட்சியில் மோகன்ராஜ் ஈடுபட்ட நிலையில், திட்டமிட்ட அளவை விட கார் அதிக உயரத்தில் பறந்து கீழே விழுந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு: அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சார்பட்டா பரம்பரை படத்துக்குப் பிறகு எப்படியாவது மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்து விட வேண்டும் என்கிற முயற்சியில் வேட்டுவம் படத்தை இயக்கி வருகிறார் பா. ரஞ்சித். இந்நிலையில், மோகன்ராஜ் மரணம் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித், பிரபாகரன், ராஜ்கமல் மற்றும் வினோத் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு ஏன்?: இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சர்தார் 2 படத்தில் சண்டை பயிற்சி கலைஞர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். ஒவ்வொரு முறையும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கும் போது எதிர்பாராத விபத்துகள் நடைபெற்றால், அதுதொடர்பான வழக்குகளையும் இயக்குநர்கள் சந்திக்கத்தான் வேண்டும். உரிய பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டதே மரணத்துக்கான காரணம் என குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், பா. ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











