தேர்தல் அரசியல்.. இதுதான் நிலைப்பாடு.. விஜய்க்கு ஆதரவா? ஓபனாகவே பேசிய பா.ரஞ்சித்
சென்னை: பொதுவாகவே தமிழ்நாட்டில் திரையுலகமும் அரசியலும் இரண்டரக் கலந்ததாகவே இருக்கிறது. அண்ணா தொடங்கி, கலைஞர், புரட்சி தலைவர், புரட்சித் தலைவி, சில காலமே முதல் என தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களுக்கும் திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மூன்று வாரங்கள் மட்டுமே முதலமைச்ச்ர் அரியணையில் அமர்ந்திருந்த ஜானகியும் திரைத்துறையில் இருந்து வந்தவர்தான். ஏன் இன்றைக்கு முதலமைச்சராக உள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், அவரது தொடக்க காலத்தில் சினிமாவில் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர் தான். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஜனரஞ்சகமான கதாநாயகனாக விளங்கியவர் தான்.
இப்படி இருக்கும்போது, தமிழ்நாடு அரசியலும் தமிழ் சினிமாவும் தனித்தனியாக இருக்கிறது என்பது ஏற்புடையதாக இருக்காது. பல நடிகர்கள் கட்சி தொடங்கி உள்ளனர். பல நடிகைகள் கட்சிகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 2026 தேர்தலில் போட்டியிட புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் தான்.

இப்படி இருக்கும்போது இயக்குநர் பா. ரஞ்சித் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடத்தில் நீங்கள் 2026 தேர்தலில் போட்டியிடுவீர்களா? அதற்கான திட்டம் ஏதாவது உள்ளதா? அப்படி இருந்தால் எந்த கட்சியுடன் கூட்டணி, எவ்வளவு தொகுதிகள் கேட்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
தேர்தல் அரசியல்: இந்த கேள்விகளை எல்லாம் கேட்ட பா ரஞ்சித் முதலில் சிரித்துவிட்டார். " ஏங்க தேர்தலில் நிற்க வேண்டும் என்று இப்போது முடிவெடுத்தால் எப்படிங்க முடியும்? நான் இன்னும் படம் எடுக்க வேண்டும். எடுக்க வேண்டிய படங்களே அதிகம் உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து எல்லாம் இப்போது யோசிக்க வில்லை. ஆனால் எங்களுக்கு என்று அரசியல் நிலைப்பாடு உள்ளது. அதை நாங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். நாங்கள் சில வேலைகளும் செய்து வருகிறோம். 2026இல் தேர்தலில் போட்டியிடுகின்ற எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
234 தொகுதிகள்: அடுத்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள், அடுத்து தேர்தலில் நின்றால் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, 234 தொகுதிகளும் கேட்பேன் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் தேர்தல் அரசியலில் களமிறங்கினாலும் கூட்டணி இல்லாமலே தேர்தலைச் சந்திக்க திட்டமிடுகிறாரோ என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
நீலம் பண்பாட்டு மையம்: இவரது நீலம் பண்பாட்டு மையம் நடிகர் விஜய் தொடங்கி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து அவற்றில் முரண் பாட்டுக்குரிய விஷயங்களை விமர்சித்து வருகிறது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை அவர்களின் அன்றாட வாழ்வியல் சவால்களை தொடர்ந்து பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











