Pa Ranjith: 2021இல் திமுகவுக்கு ஓட்டு போட்டேன்! 2026இல் திமுகவிற்கு ஆதரவு இல்லை - பா. ரஞ்சித் பளிச்!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் தனது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். வரும் 21ஆம் தேதி நினைவேந்தல் பேரணி ஒன்றினை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே படுகொலை தொடர்பான காவல்துறை விசாரணை சரியான முறையில் நடைபெறவேண்டும் என அறிக்கை வெளியிட்டப்போதே, நான் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனது வாக்கினை திமுகவிற்குச் செலுத்தியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அதாவது ஜூலை 18ஆம் தேதி வாழை படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவிலும், பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவு உருவாக்கியுள்ள வள்ளியம்மா பேரான்டி ஆல்பம் பாடல்கள் ரிலீஸ் விழாவிலும் பங்கேற்றார். இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்த பா. ரஞ்சித் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவிற்கான ஆதரவு என்பதை கேள்விக்குறிதான் என பொருள்படும்படி பேசியுள்ளார்.

எச்சரிக்கை: அந்த செய்தியாளர் சந்திப்பில், " பிரச்னைகளின் அடிப்படையில் நாம் சில கேள்விகளைக் கேட்கின்றோம். பிரச்னைகளைத் தீர்த்து வைக்காத, பிரச்னைகளைத் தீர்த்துவைக்க முயலாத, பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கான காரணங்களை ஆராயாதபோது, நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்வதற்கான தேவை இருக்கும் என நான் நினைக்கின்றேன். இது ஒரு எச்சரிக்கைதான்.
திமுகவுக்கு ஏன் ஓட்டு போட்டேன்: திமுகவுக்குத்தான் ஓட்டுபோட்டேன். ஏன் ஓட்டுபோட்டேன்? மக்களின் பிரச்னை மாறும் என நினைத்தேன். ஆனால் எதுவும் மாறாமல் இது தொடர்ந்து கொண்டே இருப்பது என்பது பெரிய பிரச்னையாக இருக்கின்றது. தொடர்ந்து தலித்துகளின் பிரச்னைகள் இரண்டாம் தரமாக பார்க்கப்படுவதில் எங்களுக்கு பெரிய விமர்சனம் உள்ளது. அந்த விமர்சனத்தை நாங்கள் தொடர்ந்து முன் வைப்போம்.

தீர்வு: இதற்கான தீர்வு என்பது, அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் அவை போதுமானதாக இல்லை. குறிப்பாக ஆட்சி அதிகாரிகளுக்கான பவர் என்பது அதிகம் இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் கையில் அதிக பவர் கொடுக்கும்போது அது ஓட்டாக மாறுவதால், இந்த பிரச்னை தொடர்ந்துகொண்டே உள்ளது. அரசு அதிகாரிகள் கரங்களில் அதிக பவர் இருக்க வேண்டும். பல கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. சமூகமாக நாம் பிரிந்திருப்பது இந்த சம்பவத்தில் வெளிப்பட்டுள்ளது" என பேசியுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித் ஆட்சியில் உள்ள திமுகவுக்கு எதிராக மிகவும் காட்டமான விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளதால், திரைத்துறை வட்டாரத்தில், பா. ரஞ்சித்துக்கு திமுக அரசு நெருக்கடியை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











