Armstrong:ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா? திமுக அரசுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பும் பா. ரஞ்சித்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தலைநகரை மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டினையே உலுக்கியது. ஆம்ஸ்ட்ராங் வெட்டப்பட்ட செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு வந்தது மட்டும் இல்லாமல், அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை உடன் இருந்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். மருத்துவமனியில் பா. ரஞ்சித் தேம்பி தேம்பி அழுத வீடியோ இப்போதும் இணையத்தில் உலா வருகின்றது.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுக அரசை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆருத்ரா இருக்கின்றது என்ற கோணத்தில் காவல்துறை விசாரிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தனது எக்ஸ் பக்கத்தில், "கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:
என்ன செயல் திட்டம்? சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

ஆருத்ரா: படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?
தலித் பாதுகாப்பு: சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்" இவ்வாறும் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











