தங்கலானுக்காக விக்ரமின் ஈடுபாடு! காலை உணவு 8 பாதாம்.. வியந்து போன மகன் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் வரப்பிரசாதங்களில் ஒருவராக கருதப்படுபவர் நடிகர் விகரம். இவர் ஒவ்வொரு படத்திற்காகவும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் என்பது இன்றைக்கு சினிமா உலகில் நுழைந்துள்ள இளம் நடிகர்களுக்கு உத்வேகத்தை கொடுத்து வருகின்றது எனலாம். முக பாவணைகள் மட்டும் இல்லாமல் ஒரே படத்திற்காக (ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ) உடலின் உருவத்தினை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு எடையை ஏற்றி இறக்கி நடித்து அனைவரையும் மிரள வைத்தார். இவரது நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள படம் தங்கலான். இந்த படத்திற்காக விக்ரமின் ஈடுபாடு குறித்து படத்தில் விக்ரமின் மகனாக நடித்த நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
நடிகர் அர்ஜுன் வளர்ந்து வரும் இளம் நடிகர். இவர் இதற்கு முன்னர் ரஞ்சித் இயக்கிய தம்மம், நட்சட்திரம் நகர்கின்றது ஆகிய படங்களில் நடித்துள்ளார். நட்சத்திரம் நகர்கின்றது படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்து பலரது பாராட்டைப் பெற்றார். இவர் தங்கலான் படத்தில் விக்ரம் மற்றும் பார்வதி திருவேத்து ஆகியோரின் மகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பாக தனியார் யூட்டூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் விக்ரம் குறித்து பகிர்ந்து கொண்ட விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

தங்கலான்: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசைக்கு இந்த படத்தின் கதை கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விக்ரம் ரசிகர்களுக்கும் ரஞ்சித் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசோகா: தங்கலான் படத்தில் நான் நடிக்கின்றேன் என்பது மட்டும்தான் எனக்கு முதலில் தெரியும். கடைசியாகத்தான் தெரியவந்தது நான் விக்ரம் சாரின் மகனாக (அசோகா கதாபாத்திரம்) நடிக்கின்றேன் என்று. அது எனக்கு மகிழ்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இதனால் எனது கதாபாத்திரத்தை நன்றாக செய்துவிட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.

கேமரா ஏங்கிள்: படப்பிடிப்புத் தளத்தில் விகரம் சார் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக இரண்டு கேமராக்கள் ஒரு ஷாட்டிற்கு வைக்கின்றார்கள் என்றால் இரண்டு கேமராவின் லென்ஸ் உனக்குத் தெரியும் படியாக இருந்து நடி. அப்போதுதான் எடிட் செய்யும்போது இரண்டு கேமராவிலு நீ நடித்து இருப்பது இருக்கும். உன்னை அந்த காட்சியில் இருந்து நீக்க முடியாது எனக் கூறினார்.

8 பாதம்: ஒரு சில காட்சிகளில் அவர் நடித்ததைப் பார்த்து மிரண்டுவிட்டேன். ஒரு நாள் காலையில் எனக்கு ஒரு பாதாம் கொடுத்தார். மேலும் இதுதான் எனது காலை உணவு எனவும் கூறினார். நான் ஏன் எனக் கேட்டேன். உடனே அவர், இந்த கதாபாத்திரத்திற்கான உடல் அமைப்புக்கு இதுதான் சரி. தினமும் காலை உணவு 8 பாதாம் மட்டும்தான். அதில் இன்றைக்கு ஒரு பாதமை உனக்கு கொடுத்துவிட்டேன் எனக் கூறினார். தனது கதாபாத்திரத்துக்காக விக்ரம் சாரின் மெனக்கெடல் என்னை வியப்பில் ஆழ்த்தியது எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











