இதுவரை பார்க்காத விஜய்யை என்னுடைய இயக்கத்தில் பார்ப்பீர்கள்.. பாண்டிராஜின் நம்பிக்கை!
சென்னை : அருள்நிதி, கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ்.
அதிகமான வெற்றிப் படங்களை கொடுத்தாலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியை இவரிடம் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இயக்குநர் பாண்டிராஜ்
இயக்குநர் பாண்டிராஜ் பசங்க படம்மூலம்தான் கோலிவுட்டில் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்தது. இருவேறு குணாதிசயங்களை கொண்ட சிறுவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

முதல் படத்திலேயே தேசிய விருது
இந்த முதல் படத்திலேயே தேசிய விருது, தமிழக அரசு விருது என விருதுகளை அள்ளினார். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அருள் நிதி நடித்திருந்த வம்சம் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தின்மூலம்தான் அருள்நிதி நாயகனாக அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனுக்கு அடித்தளம்
சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கும் கோலிவுட்டில் சிறந்த அங்கீகாரத்தை தன்னுடைய மெரினா படம்மூலம் பெற்றுத் தந்தார் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் பாண்டிராஜ்.

சிவகார்த்திகேயனுடன் 3 படங்கள்
இதனிடையே கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப் பிள்ளை என இந்தக் கூட்டணி தொடர்ந்தது. இதேபோல பசங்க 2 மூலம் சூர்யாவுடன் கூட்டணி அமைத்த பாண்டிராஜ் சமீபத்தில் அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தையும் இயக்கி வெற்றிப்படமாக்கினார்.

முன்னணி ஹீரோக்களுடன் கூட்டணி
தொடர்ந்து சிம்புவின் இது நம்ம ஆளு, விஷாலுடன் கதகளி, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் என இவரது வெற்றிப் படங்களின் பட்டியல் நீளுகிறது. முதல் படத்திலேயே சிறந்த வசனகர்த்தாவிற்கான தேசிய விருதை பெற்ற பாண்டிராஜ், விஜய் மில்டனின் கோலி சோடா படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.

விரைவில் விஜய்யை இயக்குவேன்
இதனிடையே பாண்டிராஜ், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தான் நடிகர் விஜய்க்காக சிறப்பான கதையை வைத்துள்ளதாகவும் அவரை இதுவரை இரண்டு முறை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் தான் அவரை இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மகனின் நீண்டநாள் ஆசை
விஜய்யை வைத்து படமியக்குவதிற்கு அதிகமான உழைப்பை போட வேண்டும் என்று கூறியுள்ள பாண்டிராஜ், தனது மகனுக்கும் தான் விஜய்யை வைத்து படமியக்க வேண்டும் என்பதே நீண்டநாள் ஆசை என்றும் கூறியுள்ளார். இதுவரை பார்க்காத கேரக்டரில் அந்தப் படத்தில் விஜய்யை பார்க்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











