கடைக்குட்டி சிங்கமும் ஜெயிக்கணும்.. நம்ம வீட்டுப் பிள்ளையும் ஜெயிக்கணும் – பாண்டிராஜ் ட்வீட்!
சென்னை: சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' மற்றும் கார்த்தியின் 'தம்பி' என இரண்டு படங்கள் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என இயக்குநர் பாண்டிராஜ், அவரது ஸ்டைலில் வாழ்த்துக் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனை வைத்தும் நடிகர் கார்த்தியை வைத்தும் இயக்குநர் பாண்டிராஜ் அடுத்தடுத்து படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என மனமாற வாழ்த்தியுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. கார்த்தி, சாயிஷா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் 2018ம் ஆண்டு சிறந்த ஃபேமிலி என்டர்டெயினர் படமாக மாறியது.

நம்ம வீட்டுப் பிள்ளை
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படம், சிவகார்த்திகேயனை தொடர் தோல்விகளில் இருந்து மீட்டு வெற்றியைக் கொடுத்தது. சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இன்னொரு பாசமலர் படத்தை பார்த்தது போலவே இருந்தது.
பாண்டிராஜ் வாழ்த்து
கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனை இயக்கி இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று வெளியாகியுள்ள கடைக்குட்டி சிங்கம் கார்த்தியின் தம்பி படமும் நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்ற கலக்கல் ட்வீட்டை போட்டுள்ளார்.
சூரி வாழ்த்து
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் சூரி நடிக்கவில்லை என்றாலும், என்றுமே தனது தம்பியாகவே சிவகார்த்திகேயனை பார்த்து வரும் நடிகர் சூரி, ஹீரோ படத்தை மாணவர்களும், பெற்றோர்களும் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டு ட்வீட் போட்டு படம் வெற்றிபெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மோகன் லால் வாழ்த்து
இயக்குநர் பிரியதர்ஷன் மகளான கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். கல்யாணியை சிறுவயது முதலே பார்த்து வரும் மோகன் லால், அம்முவின் படம் ஹிட்டாக வாழ்த்துக்கள் என ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











