பற்றி எரிந்த பருத்திவீரன் பஞ்சாயத்து.. சூர்யா வாய் திறக்காததற்கு இதுதான் காரணம்?.. வெளியான சீக்ரெட்
சென்னை: பருத்திவீரன் படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த வருடம் பருத்திவீரன் பஞ்சாயத்து மீண்டும் தலை தூக்கியது. இயக்குநர் அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். ஆனால் சூர்யாவோ இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க பருத்திவீரன் பிரச்னை குறித்து சூர்யா பேசாமல் இருந்ததற்கான காரணத்தை இயக்குநர் பாண்டிராஜ் கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த வருடம் அளித்த பேட்டி ஒன்றில், பருத்திவீரனில் அமீர் பொய் கணக்கு காண்பித்துவிட்டார். அவர் ஒரு திருடன். தோற்றுபோன குதிரை என ஏகத்துக்கும் மட்டமாக பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு அமீரும் தக்க பதிலடி கொடுத்தார். அமீர் தனது அறிக்கையில், "பருத்திவீரனில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்தவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள்" என வேதனையோடு குறிப்பிட்டிருந்தார்.

பெருகிய ஆதரவு: அமீரின் அந்த அறிக்கைக்கு அடுத்து சசிகுமாரும், சமுத்திரகனியும் பருத்திவீரன் படம் எப்படி உருவானது. அதில் யார் பணம் இருக்கிறது என்பது தொடர்பாக புட்டு புட்டு வைத்தனர். இதனால் ஞானவேல் ராஜா செய்வதறியாது திகைக்க ஆரம்பித்தார். அவர்களைத் தொடர்ந்து கரு.பழனியப்பன், பாரதிராஜா, பொன்வண்ணன் உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவாக இறங்கினர். இயக்குநர்கள் மட்டுமின்றி பாடலாசிரியர் சினேகனும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
கரு.பழனியப்பனின் ட்விஸ்ட்: இப்படி படைப்பாளிகள் மட்டுமின்றி ரசிகர்களும் அமீருக்கே ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக பராசக்தியில் சிவாஜிக்கு பிறகு ஒரு அறிமுக ஹீரோவுக்கு முதல் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றால் அது கார்த்திக்கு பருத்திவீரனில்தான் நடந்தது. அப்படிப்பட்ட படம் ஒரு கொடுத்த இயக்குநரை இப்படி அசிங்கப்படுத்தக்கூடாது. இதற்கு சிவக்குமார் குடும்பமும் அமைதியாக இருக்கக்கூடாது எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.
போலி வருத்தம்: மேலும் கரு.பழனியப்பன் தனது அறிக்கையில், 'ஞானவேல் ராஜாவை மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்ல வேண்டும்' என குறிப்பிட்டார். அவர் அறிக்கை வெளியிட்டு 18 மணி நேரத்துக்குள் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இருந்தாலும் அந்த வருத்தமும் போலி வருத்தம்தான் என்ற கண்டங்களும் எழுந்திருக்கின்றன. இதனையடுத்து ஞானவேல் ராஜா டோட்டல் சைலெண்ட் ஆகிவிட்டார். அதேசமயம் சூர்யா, கார்த்தியும் வாய் திறக்காமல் இருந்தனர்.
பாண்டிராஜ் பேட்டி: ஒருவழியாக இந்தப் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக அணைய ஆரம்பித்தது. இருந்தாலும் சூர்யா இந்த விவகாரத்தில் வாய் திறந்திருக்க வேண்டும் என பலரும் ஓபனாகவே பேசிவருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பருத்திவீரன் பிரச்னை போய்க்கொண்டிருந்தபோது நான் சூர்யாவுக்கு உடனே ஃபோன் செய்து, 'ஏன் சார் நீங்கள் எதுவுமே சொல்லாமல் இருக்கிறீர்கள்' என்று கேட்டேன்.
சூர்யாவின் பதில்: அதற்கு அவரோ, விடுங்க சார் அந்த கல்லை எடுத்து நானும் எரியனுமானு பார்க்குறேன் என்று கேட்டார். அதற்கு நான், 'இல்லை நீங்கள் சொன்னால்தானே உங்கள் தரப்பு நியாயம் என்னவென்று தெரியும்' என்று கூறினேன். உடனே அவர்,நான், 2டி ராஜசேகர் ஆகியோர் அமர்ந்து என்ன மாதிரியான பதில் கொடுக்கலாம் என்று யோசித்து ஒரு அறிக்கையை தயார் செய்தோம். அந்த சமயத்தில் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்தார். எனவே அந்த நேரத்தில் அதை வெளியிடுவது சரியாக இருக்காது என்று முடிவு செய்தோம். பிறகு சூர்யா என்னிடம், 'விடுங்கள் சார்.. தாக்கப்பட்ட நான் தாக்கப்பட்டவனாகவே இருந்துவிட்டு போகிறேன்' என்று கூறினார். அந்த பதில் மட்டும் வந்திருந்தால் சூர்யா தரப்பின் நியாயமும் வெளியே தெரியவந்திருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











