எம்.எல்.ஏ கமல்.. வழக்கம் போல வார்த்தையில் விளையாடிய பார்த்திபன்.. வைரலாகும் ட்வீட்!
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று பரபரப்பாக வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் மட்டுமே கடுமையான போராட்டத்தை சந்தித்து வருகிறார்.

கமல் முன்னிலை
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் மற்றும் கமல்ஹாசனுக்கு இடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது.

குவிகிறது பாராட்டு
உலகநாயகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பார்த்திபன் ட்வீட்
வார்த்தையில் விளையாடும் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் "kaMaL A" என எம்.எல்.ஏ. கமல் என்பதை குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாவில் இருந்து அரசியலில் களம் கண்ட கமல்ஹாசன் இதிலும் தனது வெற்றியை பதித்துள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்ந்து நடிப்பாரா
கோவை தெற்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் கமல்ஹாசன் வெற்றி பெற்று விட்டால், மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியன் 2 படம் பாதியிலே நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாக உள்ள நிலையில், என்ன மாற்றம் நிகழும் என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











