உலகத்தில் பணத்தைவிட நிறைய இருக்கு.. ஆனால், பணத்தால் தான் எல்லாத்தையும் அடைய முடியும்.. பார்த்திபன்!
சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள டீன்ஸ் திரைப்படம், வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி படு ஜோராக நடந்து வருகிறது. இதில் பேசிய பார்த்திபன், உலகத்துல பணத்தைவிட நிறைய இருக்கு.. ஆனால் அதை எல்லாத்தையும் பணத்தாலதான் அடைய முடியும் பணம் என்பது முக்கியமாகிவிட்டது என்று அவர் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் புது முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், ''டீன்ஸ்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 13 இளம் வயதினரை மையமாகக் கொண்டு சாகசம் நிறைந்த த்ரில்லர் கதையாக உருவாகி உள்ளது 'டீன்ஸ்' பயாஸ்கோப் டிரீம்ஸ் எல்.எல்.பி மற்றும் அகிரா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள டீன்ஸ் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 12ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. ஷங்கரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான இந்தியன் 2 அதே தேதியில் வெளியாக இருக்கும் நிலையில், பார்த்திபன் துணிந்து அதே தேதியில் டீன்ஸ் படத்தை வெளியிட உள்ளார்.

பார்த்திபன் பேச்சு: டீன்ஸ் படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்று பேசிய பார்த்திபன் படம் குறித்து பல விஷயத்தை பேசினார். அதில், நான் என்னைத்தவிர யாரிடத்திலும் எதையும் எதிர்பார்க்கவில்லை, அதனால் தான், நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறேன். அதனால் தான் நான் ரொம்ப கஷ்டத்தை அனுபவிக்கிறேன். என்னை நானே உடைச்சி, என்னை நானே வருந்தி, என்னை நானே உருவாக்கிக் கொள்கிறேன். யாரோ ஒருத்தர் எனக்கு கால்ஷீட் கொடுத்துத்தான் நான் மேல வரவேண்டும் என்று இருந்தால் என்னால் வளர்ந்து இருக்கவே முடியாது.
அதிக வலி அதுதான்: பல இயக்குநர்கள் இருக்கிறார்கள், அப்படியே பின் தங்கி போய்விடுவார்கள். பத்து வருடத்திற்கு மேல் காத்திருப்பார், அவர் பல நடிகர்களை வைத்து படத்தை இயக்கி இருப்பார். அவர்கள் பெரிய ஸ்டாராகி விடுவார்கள். ஆனால், இயக்குநர்கள் அதே இடத்தில் இருப்பார்கள். மறுபடியும் தன்னை வளர்த்துவிட்ட இயக்குநர்களுடன் மீண்டும் சேரவே மாட்டார்கள் ஆனால், இயக்குநர்கள் மட்டும் இலவு காத்த கிளிபோல அவர்களுக்காக காத்திருப்பார்கள், என்னைக்காவது ஒரு நாள் ஒரு வாய்ப்பு கொடு என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். அது இன்னும் அதிக வலியைத் தரக்கூடிய விஷயம் என்றார்.
பணம் தான் எல்லாமே: தொடர்ந்து பேசிய அவர் உலகத்தில் பணத்தை விட நிறைய இருக்கு , ஆனால் அதை எல்லாத்தையும் பணத்தாலதான் சரி செய்ய முடியும், நான் சமீபத்தில் சந்திக்கும் எல்லா விஷயத்தையும் பணத்தால் மட்டுமே சரி செய்ய முடியும். எனக்கு வரும் பிரச்சனையை என்னுடைய வாய்ப்பேச்சோ, கவிதையோ, காதலோ எதாலையும் சரி செய்ய முடியாது காசு மட்டும் தான் அதை சரி செய்யும் என்று பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











