சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!
சென்னை: சூரியன், இந்து, கல்லூரி வாசல் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபலமான இயக்குநர் பவித்ரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சூரியன் படம் உருவானது குறித்தும் சினிமாவில் அவர் செய்த சேட்டைகள் குறித்தும் ஏகப்பட்ட தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
கவுண்டமணி அண்ணனெல்லாம் சரியான சேட்டை பிடிச்ச ஆளு ஷூட்டிங் ஸ்பாட்டுல அவர் பண்ண ரகளையை எல்லாம் அப்படியே படத்துல காமெடியா மாத்தி வச்சேன் என பவித்ரன் பளிச்சென பேசியுள்ளார்.

ஒரு காலத்தில் தரமான சம்பவம் செய்த இயக்குநர்கள் எல்லாம் ஒரு காலகட்டத்துக்கு மேல் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போய் விட்டனர். அப்படியொரு இயக்குநராக மாறிய பவித்ரன் அளித்த பேட்டி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஷங்கரின் குரு: எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பவித்ரன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் தான் ஷங்கர் சினிமாவை கற்றுக் கொண்டு பிரம்மாண்ட இயக்குநராக மாறினார். 1991ம் ஆண்டு வெளியான வசந்தகால பறவைகள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பவித்ரன் 1992ம் ஆண்டு சரத்குமார், ரோஜாவை வைத்து சூரியன் எனும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கினார்.
சூரியன் படத்தில் ஆனந்தராஜ் ஹீரோவா?: சூரியன் படத்தை எடுக்க நினைத்த போது தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசினேன். ஆனந்தராஜை ஹீரோவா போட்டு படம் பண்ண சொன்னார். ஆனந்தராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரது உண்மையான பெயர் பழனி ராஜா. இந்த படத்துக்கு ஆனந்தராஜ் செட்டாக மாட்டார். சரத்குமார் தான் கச்சிதமாக பொருந்துவார் என தயாரிப்பாளரிடம் சொன்னேன். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சீதா படத்தில் வேலை பார்க்கும் போதே சரத்குமார் இந்த கதைக்கு பொருந்துவார் என அவரை நினைத்து தான் கதையே எழுதினேன் என்றேன். அப்படித்தான் சூரியன் படத்தில் சரத்குமார் நடித்தார். அவர் நடிக்கவில்லை என்றால் அந்த படம் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்காது என பவித்ரன் கூறியுள்ளார்.

கவுண்டமணியின் நக்கல்: சூரியன் படத்துக்கு முன்னதாகவே கவுண்டமணி அண்ணனோடு நல்ல பழக்கம். சும்மா ஈவ்னிங் டைம் ஆனா உட்கார்ந்து பேசுவோம். இதெல்லாம் எனக்கு சாதாரணப்பா என ஒருமுறை அவர் பேசியதை கேட்டதும், இதை அப்படியே சூரியன் படத்தில் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என மாற்றினேன். அந்த காமெடி இன்று வரை ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சரியான நக்கல் பிடித்த மனிதர் தான். அவருடன் பேசிக் கொண்டிருந்தால் சிரித்துக் கொண்டே இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
சொதப்பிய படங்கள்: சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என நினைத்து எல்லாம் நான் வரல. நல்லா படம் பண்ணனும் ஜாலியா வாழ்க்கையை என்ஜாய் பண்ணனும் நினைச்சேன். சூரியன் படத்துக்கு பிறகு ஐ லவ் இந்தியா, இந்து, திருமூர்த்தி, கல்லூரி வாசல், செல்வா என பல படம் பண்ணியிருக்கேன். அதன் பின்னர் எதுவும் செட்டாகல. மாட்டுத்தாவணி, தாராவி படங்கள் கடைசியாக பண்ணேன். அது எதிர்பார்த்த அளவுக்கு ஓடல என தனது இயக்கத்தில் வெளியாகி சொதப்பிய படங்கள் குறித்தும் இயக்குநர் பவித்ரன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











