Vijay - வேண்டாம் விஜய் சார்.. எம்ஜிஆர் அதை செய்தார்.. இயக்குநர் பேரரசு சொன்ன அட்வைஸ் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தனர். இத்தனை நாட்கள் அமைதி காத்துவந்த அவர் நேற்று அரசியல் கட்சியை தொடங்கினார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக வெற்றி கழகம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்தான் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சத்தமாகவே கூறி வந்தனர். ஆனால் விஜய்யோ லியோ படத்தின் சக்சஸ் மீட்டில், நான் மக்களுக்கு சேவை செய்பவனாகவே இருந்துவிட்டு போகிறேன் என்று ஒரு 'க்’ வைத்து பேசியிருந்தார். அப்போது பலரும், கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அதைத்தான் அவர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். 2024ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்றும் ஆரூடம் சொன்னார்கள்.

தமிழக வெற்றி கழகம்: விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது பலருக்கும் தெரியும். எல்லோருக்கும் இருந்த கேள்வி என்னவென்றால் கட்சி தொடங்குவதை அவர் எப்படி அறிவிப்பார், எங்கு அறிவிப்பார்; விஜயகாந்த், கமல் ஹாசன் போல் பிரமாண்ட மேடை போட்டு சொல்வாரா என்பதுதான். ஆனால் சைலெண்ட் சம்பவமாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நீண்ட அறிக்கையை வெளியிட்டு 'தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்திருக்கிறார்.
உற்சாகத்தில் ரசிகர்கள்: தளபதி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக கூறினர். மேலும் விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆவது மாதிரியான போஸ்டர்களும் முளைக்க தொடங்கின. தற்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என்று விஜய் அறிவித்திருப்பதால் அதற்கான அச்சார பணிகளில் ஈடுபட தொடங்கியிருக்கின்றனர்.
சினிமாவுக்கு நோ: ஒருபக்கம் விஜய் அரசியலுக்குள் வந்தது உற்சாகத்தை கொடுத்தாலும் அவரது ரசிகர்களுக்கு இன்னொரு பக்கம் சின்ன சோகம் ஒன்றும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுக்க முழுக்க மக்கள் பணிகளில் ஈடுபடுவேன். அரசியல் இன்னொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான சேவை என்று குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் அய்யோ இனி தளபதியை ஸ்க்ரீனில் பார்க்கவே முடியாதா என்று ஏக்கமாக உச் கொட்டிவருகின்றனர்.
அதெல்லாம் நடிப்பார்: அதேசமயம் அவரது ரசிகர்களில் இன்னொரு தரப்பினர் விஜய் கண்டிப்பாக நடிப்பார். சினிமாவிலிருந்து இடைக்கால பிரேக்தான் எடுத்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழு மூச்சுடன், முழு கவனத்துடன் செய்யப்பட வேண்டும். அதற்காகத்தான் அவர் இந்த பிரேக்கை எடுத்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
பேரரசு அட்வைஸ்: இந்நிலையில் இயக்குநர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “வேண்டாம் விஜய் சார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கும் முதல்நாள் இரவு வரை திரைப்பட பணியில் இருந்தார்” என்று கூறியிருக்கிறார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என்ற இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த பேரரசு தற்போது பாஜகவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











