ஜானகி, சுசீலா விட சின்மயி பெரிய பாடகியா? மன்னிப்பு கேட்க வேண்டும்.. கொந்தளித்த பேரரசு!
சென்னை: கே.ஆர். வினோத் இயக்கத்தில், ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் 'ரெட் லேபில்'. இத்திரைப்படத்தில் நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆர். வி. உதயகுமார், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பேரரசு, பாடகி சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
விழாவில் பேசத்தொடங்கிய இயக்குநர் பேரரசு, இந்தப் படத்தில் சின்மயி பாடி இருக்கிறார். அப்படி இருந்தும் அவர் ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? அந்த காலகட்டத்தில் ஒரு படத்தை இயக்கி படத்தை வெளியிடுவதற்கு படாதபாடுபட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டது சரியில்லை.

மன்னிப்பு கேட்க வேண்டும்: ஒரு பாடகி ஒரு பாடலை பாடும் போது, என்ன சூழல்? என்ன வரிகள் என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். பாடலில் வரி சரியில்லை என்றால் பாடலை நான் பாடமாட்டேன் என்று சொல்லாம். இல்லை அர்த்தம் தெரியாமல் பாடிவிட்டேன் என்று, வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால், ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியாமல் பாடிவிட்டேன் என்று சொல்வது,அந்த இயக்குநரை அவமானப்படுத்துவதற்கு சமம். இது அவரை எந்த அளவிற்கு மன வேதனையில் ஆழ்த்தி இருக்கும்.
கொந்தளித்த பேரரசு: இது மோகனுக்கு மட்டும் நடந்த அவமானம் இல்லை, தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு இயக்குநருக்கும் நடந்த அவமானம். அதற்காக சின்மயிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று ஒரு படத்தை எடுத்து முடித்து அது வெளியில் வருவதற்குள் உயிர் போகிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால், சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள். எஸ். ஜானகி, பி. சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள். அப்போதெல்லாம் இப்படியா நடந்தது? இயக்குநரை தயாரிப்பாளரை அவமானப்படுத்த உரிமை யாருக்கும் கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது தொந்தரவு தருவது தவறானதாகும் என்றார்.
தொடர்ந்து பேசிய, பேரரசு, இந்தக் கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத் தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி ,ரஜினி - ஸ்ரீபிரியா போல இந்த லெனின் - அஸ்வின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











