இளையராஜாவை வம்புக்கிழுத்த இயக்குநர் பேரரசு.. என்ன நடந்தது தெரியுமா?.. புது பஞ்சாயத்து
சென்னை: இயக்குநர் பேரரசு ஒரு காலத்தில் கோலிவுட்டில் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநராக வலம் வந்தவர். விஜய், அஜித் ஆகியோரை வைத்து ஹிட் படங்களை இயக்கியவர். ஒருகட்டத்தில் அவரது படங்கள் அவுட் டேட் ஆகிவிட்டதால் அவரால் ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. தற்போது படங்கள் எதுவும் இயக்காமல் இருக்கும் அவர்; திரைப்படங்களின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார். அப்படி லீச் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் பேசியிருக்கும் விஷயம் இளையராஜா ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.
விஜய்யை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பேரரசு. முதல் படமே மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து இரண்டாவது படமான சிவகாசி படத்திலும் விஜய்யே ஹீரோவாக நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. முதல் இரண்டு படங்கள் அதுவும் விஜய் போன்ற பெரிய ஸ்டாரை வைத்து ஹிட் கொடுத்ததால் கோலிவுட்டின் கவனம் பெற்ற இயக்குநராக மாறினார் பேரரசு.

திருப்பதி: திருப்பாச்சி, சிவகாசியை அடுத்து அஜித்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படத்தில் பேரரசுவின் ஃபார்முலா ஓரளவு மட்டுமே கைகொடுத்ததால் டீசண்ட்டான வரவேற்பு கிடைத்தது. திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி படங்களை தவிர்த்து அவர் இயக்கிய எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. காலம் செல்ல செல்ல பேரரசுவின் கமர்ஷியல் ஆட்சி முடிவுக்கு வந்தது.
பேரரசு பேச்சு: சூழல் இப்படி இருக்க மலையாளத்தை சேர்ந்த திரை கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் லீச் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தை எஸ்.எம் ராஜன் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார். புக் ஆஃப் சினிமா நிறுவனம் தயாரித்திருக்கிறது. நேற்று நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய சில விஷயங்கள் புது பிரச்னையை கிளப்பியிருக்கிறது.
என்ன பேசினார்: அவர் அந்த விழாவில் பேசுகையில், "இளையராஜா இசையமைத்த பாடல்களை கேட்போம் ரசிப்போம். அப்போது பயங்கர மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த மேடையில் அவரது பாடல்களை நிஜாம் பாடியபோது நிஜமாகவே எனக்கு பதற்றமாக இருந்தது. ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பி ரைட் விஷயம் அனைவரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அந்தப் பாடலை பாடும்போது ஒரு ஆத்ம திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
நீங்கள் கேட்பதற்கு மட்டும்தானா?: நீங்கள் கேட்பதற்கு மட்டும்தானா பாடலை போடுகிறீர்கள். அதை நாங்கள் பாட வேண்டாமா இல்லையென்றால் எனது பாடலை யாரும் பாடக்கூடாது என்று சொல்லிவிடுங்கள். படத்தில் இடம்பெறுவது, ஸ்டார் ஹோட்டல்களிலோ, நட்சத்திர விடுதிகளிலோ பாடப்படுகிறது என்றால் அதற்காக காப்பி ரைட் தொகையை வாங்கிக்கொள்ளலாம். இங்கே அருமையாக நிஜாம் பாடியிருக்கிறார். அவரது திறமை வெளிப்படுவதற்கு இளையராஜா பயன்படுகிறார். அது ஒரு பாக்கியம் என்றுதான் நினைக்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா திரை பாடல்களும் கிராமிய பாடல்கள், கும்மி பாடல்களை அடிப்படையாக வைத்தே வெற்றி பெற்றன" என்றார்.பேரரசுவின் இந்தப் பேச்சை கேட்ட இளையராஜாவின் ரசிகர்கள் எதற்காக இளையராஜாவை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று கேள்வி கேட்டு பேரரசுவை வறுத்தெடுத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











