ரஜினிகாந்த்தின் கூலி.. சின்ன படங்களுக்கு பெரிய பாதிப்பா?.. இயக்குநர் பேரரசு வெளிப்படை
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் இன்னும் ஆறு நாட்களில் ரிலீஸாகவிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. ஏனெனில் இதில் ரஜினி மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் திரைத்துறையை சேர்ந்த சூப்பர் ஸ்டார்களும் நடிக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநர் பேரரசு பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி திரைப்படம்தான் இப்போதைக்கு திரைத்துறையின் ஹெட்லைன்ஸ். இந்தியாவின் உச்ச நடிகருடன் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் உச்சத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கிறார். இதன் காரணமாக எக்கச்சக்க ஹைப் படத்தின் மீது ஏறியிருக்கிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதியை பண்டிகையாய் கொண்டாட ரசிகர்கள் தயாராகிவருகிறார்கள்.
ஆயிரம் கோடி வசூல்?: இந்தப் படத்துக்கு லோகேஷ் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். ரஜினிக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இப்போதே டேபிள் ஃப்ராஃபிட்டில் லாபம் வந்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே நிச்சயம் இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது.
ப்ரீ புக்கிங்கில் மாஸ்: வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்டது. அங்கு இதுவரை எந்தப் படமும் செய்யாத ரெக்கார்டை கூலி குக் செய்துவருவதாக ஓவர் சீஸ் ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன. இப்படி வானளவு உயர்ந்து நிற்கும் கூலி படத்தின் ரிலீஸாக பல சின்ன படங்கள் பயந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க படத்தை சிலர் பார்த்துவிட்டதாகவும் சமூக வலைத்ளங்களில் தெரிகிறது. அவர்களோ படத்துக்கு ஏகோபோக விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்கள்.

முதல் விமர்சனம்: படம் அட்டகாசமாக இருக்கிறது என்றும் ரஜினிக்கு இது ஆல்டைம் பெஸ்ட் படமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் அமீர் கானின் கேமியோ எல்லாம் வேறு லெவலில் இருப்பதாகவும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி படத்துக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் இமயமலை அளவுக்கு பில்டப்புகள் கிளம்பியிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜும் இந்த பில்டப்புகளுக்கு ஏற்றவாறு ரிசல்ட் அமைந்துவிட வேண்டுமே என்றுதான் நினைத்துக்கொண்டிருப்பார். நேற்றுக்கூட திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.
பேரரசு பேச்சு: இந்நிலையில் இயக்குநர் பேரரசு சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகிறது. ஒன்றாம் தேதி பத்து படங்கள் ரிலீஸாகின்றன். எட்டாம் தேதி பத்து படங்கள் ரிலீஸ். இது ஏன்?.. கூலி ரிலீஸானால் அது ஒட்டுமொத்த தியேட்டர்களையும் ஆக்கிரமித்துவிடும். சின்ன படங்களுக்கு ஒரு தியேட்டர்கூட கிடைக்காது. அதனால்தான் கூலி ரிலீஸுக்கு முன்னதாகவே இத்தனை படங்கள் ரிலீஸாகின்றன" என்றார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











