தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்.. கைமேரா இசை வெளியீட்டு விழாவில் மீண்டும் பற்ற வைத்த பேரரசு!
சென்னை: உலகளவில் கைமேரா எனும் டைட்டிலில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. கன்னடத்தில் உருவாகியுள்ள இந்த கைமேரா திரைப்படம் விரைவில் தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது. அதன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று பேசினர்.
இயக்குநர் பேரரசு பேசும் போது, தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதுதான் எங்களோட நம்பிக்கை. உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லைன்னா இல்லையென சொல்லிவிடுங்க, நாங்க ஒரு போதும் அதை திணிக்க மாட்டோம் என கன்னட ஹீரோ மற்றும் இயக்குநரிடமே மேடையில் பேசியுள்ளார்.

மேலும், கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினிகாந்த், சரோஜா தேவி உள்ளிட்ட பலரையும் தமிழ் சினிமாவும் ரசிகர்களும் வரவேற்று எப்போதுமே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்றும் பேசியுள்ளார்.
கன்னடத்து பைங்கிளி: தமிழ்நாட்டு ரசிகர்கள் அனைத்து மொழிகளையும் ரசிப்பார்கள், மதிப்பார்கள். அனைவரிடமும் அன்பு செலுத்த மட்டுமே எங்களுக்கு தெரியும். ரஜினிகாந்துக்கு இங்கே மக்கள் இன்று வரை கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதரவு ஒன்றே அதற்கு சாட்சி. அவரை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதே போல கன்னட கிளி சரோஜா தேவியையும் கொண்டாடினோம் என பேசியதும், கன்னடத்துப் பைங்கிளி என பத்திரிகையாளர் தேவராஜ் திருத்தியதும் அதையும் குறிப்பிட்டு எப்படி கொண்டாடுறோம் பாருங்க. ஆனால், அங்கே ஒரு நடிகையாவது தமிழ் கிளி என நீங்க கொண்டாடியிருக்கீங்களா என்று கேள்வி எழுப்பினார்.
நாங்க நம்புறோம்: தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம், தமிழில் இருந்து பிறந்தது தான் மலையாளம். உலகத்திலேயே மூத்த மொழி தமிழ் தான் என எங்களுக்கு சின்ன வயசுல இருந்தே சொல்லிக் கொடுத்திருக்காங்க. நாங்க அதை நம்புகிறோம். எப்படி கடவுள் இருக்கிறார்னு நம்புறாங்களோ அதே போலத்தான். கடவுள் இல்லைன்னும் ஒரு கூட்டம் நம்புகிறது. அந்த நம்பிக்கைக்கும் இங்கே மரியாதை உண்டு. நீங்கள் தமிழுக்கும் கன்னடத்துக்கும் சம்பந்தமில்லை என சொல்றீங்களா? அது உங்களோட நம்பிக்கை. அதை கட்டாயம் நாங்க மதிப்போம். தமிழ் சினிமா உங்களை வரவேற்கிறது என கைமேரா படக்குழுவினரை வாழ்த்தி பேசியுள்ளார்.

கைமேரா இசை வெளியீட்டு விழா: மாணிக் ஜெய் இயக்கத்தில் எத்திஷ் நடிப்பில் உருவாகியுள்ள கைமேரா படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தில் செளமியா, கிருணா நந்து மற்றும் ஞானஸ்வரி என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மனித உடலில் மிருக செல்களை செலுத்துவதன் மூலம் மனிதனுக்குள் மிருக குணம் அதிகம் கிளம்ப என்ன ஆகிறது என்கிற கதை தான் இந்த படமாக உருவாகி இருக்கிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது. இயக்குநர் மாணிக் ஜெய் ஏற்கனவே வச்சிக்கவா, செல்ஃபிஷ் போன்ற படங்களை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் கன்னடம் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், பேரரசுவும் கன்னடம் குறித்து பேசியுள்ளார். இவருக்கு எதிராக கர்நாடகாவில் எதிர்ப்புகள் கிளம்புமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











