Mari Selvaraj: நாடார் கடை.. செட்டியார் மில்.. ஐயர் ஹோட்டல்.. மாரி செல்வராஜுக்கு பேரரசு பதிலடி!
சென்னை: மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படத்துக்கு எதிராக இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்து சமூக வலைதளத்தில் மட்டுமின்றி சினிமா பிரபலங்களுக்கு இடையேயும் பெரிய விவாதத்தையே கிளப்பி உள்ளது.
வரும் ஜூன் 29ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படம் ரிலீஸ் ஆகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை ரிலீசுக்கு முன்பாகவே கிளப்பி உள்ள நிலையில், ரிலீசுக்கு பிறகு என்னவெல்லாம் பிரச்சனை வெடிக்கும் என்கிற அளவுக்கு பரபரப்பு பற்றிக் கொண்டு வரும் நிலையில், இயக்குநர் பேரரசு பதிவிட்டுள்ள போஸ்ட் மாரி செல்வராஜுக்கான பதிலடி என ரசிகர்கள் அதை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

மாரி செல்வராஜ் ஆதங்கம்: தேவர் மகன் டைட்டில் மற்றும் அந்த படத்தில் இடம்பெற்ற "போற்றி பாடடி பெண்ணே.. இது தேவர் காலடி மண்ணே" என்கிற வரிகள் இடம்பெற்ற பாடல் தேவர் சமூக மக்களை கொம்பு சீவி விட்டதாகவும், அதன் காரணமாக பட்டியலின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு எதிர்வினையாகவே மாமன்னன் படம் உருவாகி உள்ளது என்று மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமலுக்கு முன்னாடியே தனது ஆதங்கத்தை மாரி செல்வராஜ் கொட்டித் தீர்த்து விட்டார்.
கிளம்பிய சர்ச்சை: மாரி செல்வராஜ் கமல்ஹாசனின் படைப்பை எதிர்த்து பேசிய நிலையில், கமல் தேவர் மகன் படத்தை அந்த கண்ணோட்டத்துடன் எடுக்கவில்லை என்றும் நீங்கள் தான் அந்த கண்ணோட்டத்தில் பார்த்துள்ளீர்கள் என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் மாரி செல்வராஜ் கருத்துக்கு எதிர் கருத்துக்களை முன் வைக்க சர்ச்சை வெடித்தது.
பேரரசு போஸ்ட்: இந்நிலையில், இயக்குநர் பேரரசு கவிதை வடிவில் மாரி செல்வராஜுக்கு பதிலடி கொடுத்துளள போஸ்ட் ஒன்று தீயாக பரவி வருகிறது.
"ஊரில்
நாடார் கடை
செட்டியார் மில்
ஐயர் ஹோட்டல்
என்று நாம் அழைத்தபோது
எந்த பிரச்சனையும் இல்லை!
வ.உ.சிதம்பரம்பிள்ளை
முத்துராமலிங்கத் தேவர்
உ.வே.சுவாமிநாத அய்யர்
ராமசாமி படையாச்சி
சரோஜினி நாயுடு
இப்படி வரலாறு படிக்கும்போது
நாட்டில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்பதைக்கூட
கோனார் தமிழ் உரையில்தானே
படித்தோம்
அப்பொழுது நமக்குள்
பேதங்கள் தோன்றவில்லை!
ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார்
வாகினி நாகிரெட்டி
தேவர் பிலிம்ஸ் சின்னப்ப தேவர்
சிவஶ்ரீ பிக்சர்ஸ் மணி அய்யர்
இப்படி தயாரிப்பாளர்களை
ஜாதியைச் சொல்லி அழைத்தபோது
திரைத்துறையில்
எந்தப் பிரச்சினையும் இல்லை!
குறத்தி மகன்
தேவர் மகன்
சின்னக் கவுண்டர்
அய்யர் தி கிரேட்
இப்படி ஜாதிப் பெயரில்
படங்கள் வந்தபோதும்
எந்தப் பிரச்சினையும் இல்லை!
இன்று
தொட்டதெற்கெல்லாம்
ஜாதிப் பிரச்சனை!
யார் காரணம்?
ஜாதி, மதம் மறந்து
கலைஞனாக மட்டுமே
தன்னை அர்ப்பணித்தவர்களுக்குள்
ஜாதி வெறியை வித்திட்டவர்கள்
யார்?

இன்று
உடன் பணிபுரிபவரின்
ஜாதியை எவனும்
ஆராய்வதில்லை!
மீண்டும் அந்த
ஆராய்ச்சியை
ஆரம்பித்து வைத்துவிடாதீர்கள்!
வாய்ப்பு கேட்பவனிடம்
எவன் ஜாதியை கேட்கிறானோ
அவனே மனிதப்பிழை!
பெரும்பாலும்
சமநிலை அமைந்துவிட்ட நிலையில்
மீண்டும் ஒற்றுமைக்கு
சமாதி கட்டிவிடாதீர்கள்!
தெளிந்த குளத்திற்குள்
பாறாங்கல்லை எறியாதீர்கள்
ஜாதிப்பற்று மனித இயல்பு
ஜாதி வெறி மனிதத்தின் அழிவு!"
என இயக்குநர் பேரரசு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மாமன்னன் படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் என்ன மாதிரியான சாதிய அரசியலை இயக்குநர் மாரி செல்வராஜ் பேசி உள்ளார் என்பதை காணவும் அதனை விமர்சிக்கவும் பலரும் தயார் நிலையில், இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











