மனோஜ் பாரதிராஜாவுக்கு மன உளைச்சலா?.. உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை.. பேரரசு சொன்ன விஷயம்!
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. தாஜ்மஹால் படத்தின் மூலம் தனது மகன் மனோஜை ஹீரோவாக மாற்றினார் பாரதிராஜா. தொடர்ந்து சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈரநிலம், மகா நடிகன், சாதுரியன் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
மிகப்பெரிய இயக்குநரின் வாரிசான மனோஜ் பாரதிராஜா சினிமாவில் பல படங்களில் நடித்தாலும், அவர் ஹீரோவாக நடித்த எந்த ஒரு படங்களும் பெரிதாக ஓடவில்லை. அதன் காரணமாக அப்பா போலத்தானும் இயக்குநராக வேண்டும் என்கிற விருப்பத்தால் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

விசில் மற்றும் பவித்ரா எனும் குறும்படங்களை இயக்கிய மனோஜ் பாரதிராஜா கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். பெரிய இயக்குநராக முடியவில்லை மற்றும் நடிகராக முடியவில்லை என்கிற மன அழுத்தம் காரணமாகத்தான் மனோஜ் உயிரிழந்தார் என சில பிரபலங்களே பேசுவது மிகவும் தவறான செயல் என்றும் அவர் எப்போதாவது உங்களிடம் தான் மன வருத்தத்தில் இருக்கிறேன் எனக் கூறினாரா? என இயக்குநர் பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
வாய்க்கு வந்தபடி பேசுவது: சினிமா பிரபலங்களுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு செல்லும் சில பிரபலங்கள் மைக்கை பார்த்தவுடன் தங்களுக்கு தோன்றிய விஷயங்களை அனைத்தும் தெரிந்தது போல வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். அவர்கள் பேசுவது ஒரு நபரை பறிகொடுத்து பரிதவிப்பில் தவிக்கும் குடும்பத்தினரை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர் என பேரரசு கூறியுள்ளார்.

உங்ககிட்ட மனோஜ் சொன்னாரா?: பாரதிராஜாவின் மகன் என்கிற அழுத்தம் காரணமாகத்தான் தனக்கு உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டது என்றும் அதனால் தான் மன கஷ்டத்தில் இருக்கிறேன் என்று எப்போதாவது யாரிடமாவது மனோஜ் கூறியிருப்பாரா? நீங்களே ஏன் இப்படி சொல்றீங்க? இதெல்லாம் ரொம்ப தவறு என பேரரசு சில பிரபலங்கள் மற்றும் யூடியூபர்கள் மனோஜ் மரணத்துக்கு காரணம் இதுதான் என பேசி வருவதை கண்டித்து பேசியுள்ளார்.
சிரிச்சிட்டு சந்தோசமா இருப்பார்: நான் அவரோட ஆபிசுக்கு அடிக்கடி போவேன். அவர் எப்போதுமே சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கும் மனிதர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே யோசிப்பாரே தவிர எதையுமே இழந்து விட்டதாக எப்போதுமே வாடியது கிடையாது. தேவையில்லாமல் வீண்பழி சுமத்த வேண்டாம் என ஆதாரமில்லாமல் பேசும் நபர்களை சாடியிருக்கிறார் பேரரசு.
பாரதிராஜா மீது பழி: இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்ட தனது மகனை ஹீரோவாக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார் என்றும் மனோஜுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு காரணமே பாரதிராஜா தான் என்றெல்லாம் பேசுவது முறையல்ல என்றும் மனோஜுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு தான் அவரது மறைவுக்கு காரணமே தவிர மற்றபடி யாருடைய அழுத்தமும் இல்லை என தெளிவாக பேசியுள்ளார். பிரபலங்கள் உயிரிழந்த பின்னர், அவர்களை பற்றி அவதூறு பரப்புவதும் அவர்களது குடும்பத்தினரை குற்றவாளிகளாக மாற்றுவதும் சரி கிடையாது என்பதை உணர்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











