அரசியலுக்கு வேறொரு சந்தர்பத்தை பாருங்கள்.. இது மாணவிகளின் மானப்பிரச்சனை..பிரபல இயக்குநர் காட்டம்!
சென்னை: பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் தொடர்பாக இயக்குநர் பேரரசு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை கேகே நகரில் இயங்கி வரும் பிஎஸ்பிபி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, அநாகரிகமாக நடந்துகொள்வது என இருந்து வந்துள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்பின் போதும் அரைகுறை ஆடையில் வருவது என இருந்து வந்துள்ளார்.

பாலியல் தொல்லை
இதுதொடர்பாக முன்னாள் மாணவ மாணவிகள் கொடுத்த எதிர்ப்பு குரல் பூதாகரமாக ராஜகோபாலனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனை தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது.

பிஎஸ்பிபி பள்ளி
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் பாலியல் தொல்லை விவகாரத்தால் பிஎஸ்பிபி பள்ளி சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

தூக்கிப்போடுங்கள்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பேரரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள்.

பழிவாங்கும் குரல்தான் அதிகம்
சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணியைத் தொடரக்கூடாது. இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

அசிங்கப்படுத்துவதே நோக்கம்
ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர். சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக கொடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.

மாணவிகளின் மானப்பிரச்சனை
உங்களின் அரசியல் பழிவாங்கலுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்.

பெண்ணின் மானம்
இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம்". இவ்வாறு தனது அறிக்கையில் பேரரசு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











