ரசூல் பூக்குட்டியுடன் 15 நாள் சவுண்ட் மிக்சிங்.. லாக்டவுன் முடிய காத்திருக்கும் பிரபல இயக்குனர்!
சென்னை: ரசூல் பூக்குட்டியுடன் 15 நாள் சவுண்ட் மிக்சிங் வேலை பாக்கி இருக்கிறது என்று இயக்குனர் பிரபு சாலமன் சொன்னார்.
Recommended Video
தமிழில், கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல், தொடரி உட்பட பல படங்களை இயக்கியவர், பிரபு சாலமன்.
அடுத்து கும்கி 2, காடன் ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வந்தார். காடன் படம் மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது.

ஹாத்தி மேரே சாத்தி
இந்தியில், ஹாத்தி மேரே சாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் இந்தப் படம் உருவாகிறது. 1971 ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, தனுஜா நடிப்பில் சாண்டோ சின்னப்பா தேவர் இந்தியில் உருவாக்கிய படம், ஹாத்தி மேரே சாத்தி. எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இதுதான் எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில், நல்ல நேரம் என்று ரீமேக் செய்யப்பட்டது.

ராணா, விஷ்ணு
யானையை மையப்படுத்திய கதை என்பதால், இந்த டைட்டிலை அனுமதி பெற்று இந்தப் படத்தின் இந்தி பதிப்புக்குப் பயன்படுத்தி உள்ளனர். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இதில் ராணா ஹீரோ. விஷ்ணு விஷால், ஸோயா ஹூசைன், ஸ்ரியா பிலோன்கர், புல்கிட் சாம்ராட், ரோபோ சங்கர், அஸ்வின் ராஜா, ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

தாய்லாந்து காடு
தாய்லாந்து காடுகளில் யானைகளுடன் சுமார் 25 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளிலும் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த 'கும்கி படத்துக்கு பிறகு யானையை மையமாக வைத்து பிரபு சாலமன் மீண்டும் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு
இந்தப் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிரபுசலாமனிடம் படம் பற்றி பேசினோம். அவர் கூறும்போது, 'காடன் படத்துக்கு இன்னும் 15 நாட்கள் வேலை பாக்கி இருக்கிறது. சவுண்ட் மிக்சிங் வேலைகள் இருக்கிறது.

பின்னணி இசை
ரசூல் பூக்குட்டி, இதை மும்பை ஸ்டூடியோவில் தொடர இருக்கிறார். லாக்டவுனுக்குப் பிறகு இந்த வேலைகள் தொடங்கும். 'கும்கி 2' படத்தின் வேலைகளும் முடிந்துவிட்டன. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருகிறது. இசை அமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா, பின்னணி இசை அமைத்து வருகிறார். விரைவில் இந்த பணிகள் முடியும்' என்றார் இயக்குனர் பிரபு சாலமன்.


Click it and Unblock the Notifications











