Jailer - ரஜினி இமயமலைக்கு போகலனா படம் தோற்கும்.. ஜெயிலருக்கு புது லாஜிக் சொல்லும் இயக்குநர்
சென்னை: Jailer (ஜெயிலர்) ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்லவிருக்கிறார் அதனால் ஜெயிலர் படம் ஹிட்டாகும் என இயக்குநர் ப்ரவீன் காந்தி தெரிவித்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் அவருக்கு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்தப் படத்தின் ரிசல்ட்டை வைத்துதான் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா இல்லை ஒரே சூப்பர் ஸ்டார் தான் மட்டும்தானா என்பதற்கு அவருக்கே விடை கிடைக்கும். படம் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகிறது.

நம்பிக்கை பொய்க்காது: ரஜினியைப் போலவே அவரது ரசிகர்களும் ரொம்பவே ஆவலுடன் இந்தப் படத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். கடைசி இரண்டு படங்களில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்து கோலிவுட்டில் தான் ஒரு கிங் என்பதை விஜய்க்கும், விஜய் ரசிகர்களுக்கும் நிரூபிப்பார் ரஜினிகாந்த் என ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.
டிக்கெட் புக்கிங் ஆரம்பம்: வெளிநாடுகளில் சில நாட்களுக்கு முன்னதாகவே ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டது. அங்குள்ள ரசிகர்கள் ஆவலோடு டிக்கெட்டை புக் செய்துவருகின்றனர். அதேபோல் இந்தியாவில் இன்று படத்துக்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பித்திருக்கிறது. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்கள் புக் செய்துகொண்டே இருக்கின்றனர். பத்தாம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது.
ப்ரவீன் காந்தி பேட்டி: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரிசல்ட் நல்ல விதமாக அமைந்துவிட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இயக்குநர் ப்ரவீன் காந்தி ஜெயிலர் படம் குறித்தும், ரஜினிகாந்த் குறித்தும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
என்ன பேசினார்?: அந்தப் பேட்டியில் பேசிய ப்ரவீன் காந்தி, "எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகும். கண்டிப்பாக தோற்காது. ஏனென்றால் ரஜினிகாந்த் ஏழாம் தேதி இமயமலைக்கு செல்கிறார். அவர் அங்கு சென்றாலே படம் மெகா ஹிட்டாகிவிடும். அதில் ஒரு காரணம் இருக்கிறது. இமயமலைக்கு செல்லும் அவர் அங்கு கடுமையான தவம் இருப்பார். அப்படி அவர் தவம் இருக்கும்போது அந்த வைப்ரேஷன் இங்கு படத்தின் ரிசல்ட்டில் எதிரொலிக்கும்.
இமயமலைக்கு போலனா ஹிட் ஆகாது: அவர் இமயமலைக்கு சென்றபோது ரிலீஸான படங்கள் அனைத்தும் ஹிட்டாகியிருக்கின்றன. ஆனால் பாபா, லிங்கா, கபாலி ஆகிய படங்களின் ரிலீஸின்போது அவரால் இமயமலைக்கு செல்ல முடியவில்லை. எனவே அந்தப் படங்கள் ஹிட்டாகவில்லை" என்றார். ப்ரவீன் காந்தி ரட்சகன், ஜோடி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











