அவர்களைவிடவும் விஜய்தான் பெஸ்ட்.. தனியாக தெரியும் குதிரை.. புகழ்ந்து தள்ளிய பிரசாந்த் பட இயக்குநர்
சென்னை: நடிகர் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. முக்கியமாக விமர்சன ரீதியாக பெருத்த அடி வாங்கியது. இந்தச் சூழலில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடந்துவருகிறது. படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சித்திரை திருநாளை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்தச் சூழலில் பிரசாந்த்தை வைத்து ஸ்டார், ஜோடி படங்களை இயக்கிய பிரவீன் காந்தி விஜய் குறித்து பேசியிருக்கிறார்.
வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்திருந்திக்கிறார் அவர். எனவே லியோ படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையவிருக்கிறார்கள் என அட்டகாசமான அறிவிப்பு வெளியானது. அஜித்துக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் தரமான சம்பவத்தை செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

GOAT: இந்தப் படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிகம் புழக்கத்தில் இருக்கும் GOAT வார்த்தையை படத்தின் பெயராக வைத்தது ரொம்பவே புதுமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கி முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது.
போஸ்டர்கள்: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு GOAT படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டர்களில் விஜய் படு யங்காக இருந்தார். மேலும் இதில் விஜய் டபுள் ஆக்ஷன் என்றும் அப்பா கேரக்டர் மற்றும் மகன் கேரக்டரை செய்கிறார் என்றும் தெரிகிறது. அப்பா விஜய்க்கு நடக்கும் துரோகத்தை டைம் ட்ராவலில் சென்று முறியடிப்பதுதான் படத்துடைய ஒன்லைன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அப்பா விஜய் கமாண்டோ ரோல் செய்திருக்கலாம் என்று போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது.
எப்போது ரிலீஸ்: படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான விசில் போடு பாடல் கடந்த 14ஆம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வழக்கம்போல் விஜய்யின் நடனம் பட்டாசாக இருந்தது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல் பிரசாந்த்தும் இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். அவரது நடனமும் ரசிக்கும்படி இருந்ததாகவே பலர் சொல்கிறார்கள்.
பிரவீன் காந்தி பேட்டி: இந்நிலையில் பிரசாந்த்தை வைத்து ஜோடி, ஸ்டார் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பேசும்போது, "தனியாக ஓடி வெல்வது பெரிய விஷயமே கிடையாது. ஆனால் மூன்று குதிரைகள் அதுவும் சரியான குதிரைகள் ஓடும்போது அதில் தனியாக தெரிவதுதான் சிறப்பு.
பெரிய விஷயம் இது: இந்தியாவின் சிறந்த நடன கலைஞர் பிரபுதேவா ஆடும்போது அவரையும் தாண்டி விஜய் தனது நடன திறமையால் ரசிகர்கள் தன்னை ஃபோக்கஸ் செய்யும் அளவும் டான்ஸ் ஆடியிருக்கிறார். அது மிகப்பெரிய விஷயம். பிரபுதேவாவும், பிரசாந்த்தும் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்கள். அவர்களுடன் இணைந்து சிறப்பாக நடனம் ஆடி தன்னுடைய பலம் என்னவென்பதை காட்டியிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











