Demonte Colony 3: ஆட்டம் காட்டி வருகிறது டிமான்டி காலனி 3.. வெளியான புது தகவல்!
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய 'டிமான்டி காலனி' இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலையும் அள்ளியது. இத்திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், அருள்நிதி, அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாக உள்ளது.
திகில் திரைப்படமான டிமான்டி காலனி படம் 2015ம் ஆண்டு வெளியானது. இப்படத்தல் அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு இரவில் வீட்டிற்குள் நடக்கும் பேய்யின் அட்டகாசம் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது. டிமான்டி காலனி படம் வெளியான போது, உண்மையிலேயே இதுபோன்று ஒரு இடம் இருக்கா என பலர் ஆராய்ச்சியே செய்தனர்.

டிமான்டி காலனி 2: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அஜய் ஞானமுத்துவே டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கினார். அதில், அருள்நிதி, அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்து இருந்த இப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுத்தது.
படத்தின் கதை: முதல் பாகத்தில் டிமான்டி காலனியில் இருந்த செயினை எடுத்த அனைவரும் இறந்துவிடுவது போல கதை முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில், இறந்ததாக கருதப்பட்ட அருள் நிதி மருத்தவமனையில் கோமாவில் இருக்கிறார். அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகிறது. அதற்காக அருள்நிதியின் சகோதரர், பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் ஆகியோர் போராடுகின்றனர். இதில் அருள்நிதி காப்பாற்றப்பட, அவரின் சகோதரர் கோமாவிற்கு சென்றுவிடுவது போல இரண்டாம் பாகம் முடிக்கப்பட்டு, மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டு இருந்தது.

டிமான்டி காலனி 3: இதனால், டிமான்டி காலனி மூன்றாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், டிமான்டி காலனி 3 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாவும், அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்றாம் பாகத்திலும் அருள்நிதி தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











