அந்த காரணத்துக்காக ஹெச். வினோத்தை கொல்லவும் தயாரான பார்த்திபன்.. ஏன் இந்த விபரீத முடிவு?
சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான திரை மொழியில் தனது படங்களை உருவாக்கி அதன்மூலம் தனக்கென தனி அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவர் இயக்குநர் பார்த்திபன். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குநராக மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். கமர்ஷியல் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படங்களை இயக்கும் பார்த்திபன் தனது மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்கின்றார். இவரது நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவர் ஏற்று நடித்த சோழ மன்னன் கதாபாத்திரம் இன்றைக்கும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இயக்குநர் ஹெச்.வினோத்தை கொல்லவும் தயார் எனக் கூறியுள்ளார். அவர் ஏன் அவ்வாறு கூறினார், என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஹெச். வினோத், சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின்னர், கார்த்தி நடிப்பில் உருவான, தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமா உலகம் தன்னை கவனிக்கும்படி செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார். அதில், நேர்கொண்ட பார்வை மட்டும் ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. வலிமை மற்றும் துணிவு படங்களில் துணிவு பலரது கவனத்தை ஈர்த்தது. வலிமை படம் சமூகத்தில் உள்ள போதை என்ற அவலத்தை பேசியது.

விஜய்: இந்நிலையில் ஹெச். வினோத் அடுத்து இயக்கவுள்ள படம், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ளது. இந்தப் படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி படம் என அவரே தெரிவித்துவிட்டார். இந்தப் படத்திற்குப் பின்னர், விஜய் முழுநேர அரசியலுக்குச் செல்வதால், இந்தப் படத்தின்மீது அனைவரது கவனமும் விழுந்துள்ளது. மேலும் இது விஜய்யின் 69வது படம் ஆகும்.
தளபதி 69: இந்தப் படம் குறித்து ஹெச். வினோத் ஏற்கனவே பேசியபோது, இந்தப் படம் ஒரு அரசியல் படமாக இருக்காது. முழுக்க முழுக்க கமெர்சியல் படமாக இருக்கும். இந்தப் படத்தின் கதை கமெர்ஷியலாக அனைவரும் பார்க்கும் விதத்தில் இருக்கவேண்டும் என நடிகர் விஜய் தன்னிடம் கூறியதாக ஹெச். வினோத் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போதைக்கு இந்தப் படத்திற்கு தளபதி 69 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தை கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான கே.வி.என். புரெடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது.

கொலை: இந்நிலையில் தளபதி 69 படம் குறித்து பேசிய இயக்குநர் பார்த்திபன், " விஜய்யின் கடைசி படத்தை நான் இயக்கவேண்டும் என ஆசைப் படுகின்றேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும். வேண்டுமானால், ஹெச். வினோத்தை கொலை செய்துவிட்டு அதன்பின்னர் விஜய்யிடம் சென்று, ஹெச். வினோத் என்னிடம் உதவியாளராக பணியாற்றியவர்தான். அவர் இப்போது இல்லை, நான் உங்களின் கடைசி படத்தை இயக்குகின்றேன்" என சிரித்துக்கொண்டு ஜாலியாக பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவுகின்றது.



Click it and Unblock the Notifications











