உதவுறேன்னு சொல்லி ஏமாற்றுபவர்கள் மத்தியில்.. சிவகார்த்திகேயன் நம்பிக்கையா இருக்காரு.. சொன்னது யார்?
சென்னை: நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என மக்களை தன்னால் முடிந்த அளவுக்கு சினிமா மூலம் மகிழ்வித்து வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அதாவது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என இரண்டு படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் இரா. சரவணன், சசிகுமார் நடித்த நந்தன் படத்தின் இயக்குநர். இந்த படம் பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களை அந்ததந்த பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் எவ்வாறு எல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள், தரக்குறைவாக நடத்துகிறார்கள் என்பது குறித்து படமாக்கி இருந்தார். மேலும் இந்த படத்தின் தொடக்கத்தில் இந்த கதை கற்பனைக் கதையல்ல எனவும், முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், மறைந்த நெல் ஜெயராமனின் மகனின் படிப்புக்கு உதவி வருகிறார் என்பது குறித்து நெகிழ்ச்சி பொங்க பகிர்ந்துள்ளார். மேலும் நெல் ஜெயராமனுக்கு சிவகார்த்திகேயன் அளித்த உறுதியை இன்று வரை நிறைவேற்றி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

நெல் ஜெயராமன்: அவரது எக்ஸ் பதிவில், " அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்த போது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவை கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார்.
நம்பிக்கை: இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா. நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன். அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கை விரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக் கொண்டு, 'நானிருக்கிறேன் அண்ணன்' என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
100 தடவை சொன்ன மாதிரி: இவரது பதிவை பார்த்த இணையவாசிகள் மற்றும் சிவகார்த்தியேன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகிறார்கள். மேலும் இணையத்தில் இந்த தகவலை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயன் ஒரு தடவை சொன்னால் 100 தடவை சொன்ன மாதிரி என்றும், இந்த காலத்தில் பணம் இருக்கிறவன் உதவி செய்ய பெரிய மனசு வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இப்போது இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











