சீதாவுடனான விவாகரத்துக்கு பின்னர்.. மறுமணம் செய்து கொள்ளாததற்கு காரணம்.. மனம் திறந்த பார்த்திபன்
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு இருப்பவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுக்கு எப்போது பெயர் பெற்றவராக ஜொலித்து வருகிறார். தொடர்ந்து தனது படங்களை தமிழ்சினிமா வேகமாக சென்று கொண்டு இருக்கும் திசையில் செல்லாமல், இப்படியும் ஒரு வகையான சினிமா உள்ளது என தொடர்ந்து ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார், இவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தான் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் பார்த்திபன், திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் உதவி இயக்குநராக இருந்து தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானவர். இவர் இயக்குநராவதற்கு முன்னர் பல படங்களில் குறிப்பாக கே. பாக்யராஜ் படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் படத்தின் கதாநாயகனாக அவர் தான் இயக்கிய முதல் படமான புதிய பாதை படத்தில் தான் நடித்தார். இந்த படத்தின் கதையை முதலில் கமல் ஹாசனிடம் கூறியுள்ளார்.அவரோ கால்ஷீட் இல்லை இல்லை என மறுத்து வந்துள்ளார்.
இதனால் கோபப்பட்ட பார்த்திபன் அந்த படத்தில் தானே நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றதால், பார்த்திபன் ஒரே படத்தில் அதுவும் தனது முதல் படத்தில் இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்றார். இது மட்டும் இல்லாமல், இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

பார்த்திபன்: இவரது முதிர்ச்சியான நடிப்பு பார்த்திபனை நல்ல நடிகராகவும் தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது. இவர் நடித்த பல படங்களில் இவரைக் காட்டிலும் சிறப்பான நடிப்பை மற்றவர்களால் நடிக்க முடியாது எனக் கூறும் அளவிற்கு நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு அழகி, ஆயிரத்தில் ஒருவன், மாவீரன் கிட்டு, வெற்றிக் கொடி கட்டு என கூறிக் கொண்டே போகலாம். இது மட்டும் இல்லாமல், இவர் இயக்கிய படங்களில் பார்த்திபன் நடிப்பு என்பது எப்போதும் பாராட்டுக்குரியதுதான்.
திருமணம்: பார்த்திபன் கடந்த 1989 ஆம் ஆண்டு தனது முதல் படமான புதிய பாதை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சீதா. இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும், 11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள். இவர்களுக்கு கீர்த்தனா, ராக்கி மற்றும் அபிநயா என மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன் பின்னர் பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. அதேபோல் சீதாவும் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

சீதா: இந்நிலையில், பார்த்திபன் சீதாவுடனான மணமுறிவுக்குப் பின்னர் அவர் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தைத் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது, இது தொடர்பாக அவர் பேசும்போது, " சீதாவுக்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை என்பதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரைப் பிரிந்த பின் அவரது தாயார் இறப்பின் போதே அவரை கடைசியாக சந்தித்தேன். இந்த் வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால், அதனுடன் பயணிக்காமல் அதற்கு பதிலாக நினைவுகளுடன் பயணிக்கத் தொடங்கி விட்டேன். இதுவும் ஒருவிதமான காதலின் வடிவம்" எனத் தெரிவித்துள்ளார். பார்த்திபன் இவ்வாறு கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











