Sivakarthikeyan: சூரியவம்சம் பார்ட் 2வில் சிவகார்த்திகேயன்.. தேவயானி கணவர் ராஜகுமாரன் ஓபன் பேச்சு!
சென்னை: இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் உருவாகி கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான படம் சூர்யவம்சம். இரட்டை வேடங்களில் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படமான இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் ஓபனாக பேசியுள்ளார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இவரும் நடிகை தேவயானியும் அறிமுகமான படம் என்றால் அது இந்த சூர்யவம்சம் படம் தான். இந்த படத்தில் இயக்குநர் விக்ரமனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராஜகுமாரன். இந்த படத்தில் ஏற்பட்ட பழக்கம், அடுத்தடுத்த படங்களில் பணியாற்றும்போது இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டதால், இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவரது இயக்கத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என உள்ளிட்ட படங்களிலும் தேவயானி நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, " சூரியவம்சம் படம் மிகப்பெரிய ஹிட் படம். இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்காக சூப்பர் குட் பிலிம்ஸ் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது பேச்சுகள் அடிபடுகிறது. ஆனால் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக வேண்டும் என்று என்றால் அது விக்ரமன் சார் கையில் தான் உள்ளது.

சிவகார்த்திகேயன்: அவர் தான் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க வேண்டும். சூர்யவம்சம் படத்தில் நடித்த சரத்குமார், ராதிகா, தேவயானி, ஆனந்தராஜ் என முக்கிய கதாபாத்திரங்களில் ஏற்று நடித்த அனைவரும் இருக்கிறார்கள். ஆனால் விக்ரமன் சார் அவரது உடல் நிலையை மனதில் கொண்டு, குடும்பத்தை மனதில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். சூர்யவம்சம் படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானிக்கு ஒரு மகன் கதாபாத்திரம் உள்ளது. இந்த காலத்தில் அந்த மகன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மார்க்கெட்டில் டாப்: சிவகார்த்திகேயன் இருந்தால்தான் அது சூர்யவம்சம் இல்லை என்றால் அது வெறும் வம்சமாக மாறிவிடும், ஒளி இல்லாத வம்சமாக மாறிவிடும். காரணம் சூர்யவம்சம் படத்தை எடுக்கும் போது அன்றைக்கு மார்க்கெட்டில் டாப்பில் இருந்த சரத் குமார் சார், ராதிகா மேடம், தேவயானி மேடம் உள்ளிட்டவர்களை நடிக்க வைத்தோம். அதேபோல் இரண்டாவது பாகத்தில் இன்றைக்கு மார்க்கெட்டில் டாப்பில் உள்ள சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும்.

பெயருக்காக: இவர்கள் அனைவரும் படத்தில் இருப்பது மட்டும் இல்லாமல் இரண்டாம் பாகத்தின் கதையும் சிறப்பாக அமைய வேண்டும். அப்போதுதான் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும். சூர்யவம்சம் என்ற பெயருக்காக படத்தை எடுத்தால் அது சரியாக வராது, அது தவறும் கூட. சிவகார்த்திகேயன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஒருவர் படத்திற்கு குடும்பத்துடன் கண்ணை மூடிக் கொண்டு போகலாம் என்றால் அது சிவகார்த்திகேயன் படத்திற்குத்தான். நான் அப்படித்தான் பார்க்கிறேன். அப்படித்தான் கருதுகிறேன்.
துறைக்கான ஒழுங்கு: மற்ற படங்கள் ரிலீஸ் ஆகும்போது இந்த படத்தை பார்க்கலாமா? பார்க்க முடியுமா? முடியாதா? குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக இது சரியான படமா என்ற கேள்விகள் பல உள்ளது. சிவகார்த்திகேயன் மட்டும் தான் மிகச் சரியாக தனது ஒவ்வொரு படத்தையும் டிசைன் செய்து செய்கிறார். அவரது எல்லா படங்களும் அப்படித்தான் உள்ளது. நாம் ஒரு துறையில் இருக்கிறோம், அந்த துறைக்கு என்று ஒரு ஒழுங்கு உள்ளது, ஒரு நேர்த்தி உள்ளது. அதை மிகத் தெளிவாக கட்டமைத்து ஒரு படத்தை வெளியிடுகிறார்.
கமல்ஹாசன்: சிவகார்த்திகேயன் போல யாருமே தமிழ் சினிமாவில் செய்வது இல்லை. கமல்ஹாசன் சார் படங்களே சலங்கை ஒலி மாதிரியான படங்களைப் பார்த்துவிட்டு திருப்திகரமாக வரலாம். ஒரு சில படங்களை பார்க்கச் சென்றால், முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டும். சினிமாவில் வெற்றியின் ரகசியத்தை சிவகார்த்திகேயன் மிகச் சரியாக பிடித்துவிட்டார். அவருக்கு நான் தலைவணங்குகிறேன். சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவரது படங்கள் வரும்போது அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பேன். அவருக்கு சூப்பர் ஸ்டார் என்றுதான் மெசேஜ் அனுப்புவேன். சிவகார்த்திகேயன் வளர்ந்து நிற்பது எனக்கு மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் ராஜகுமாரனின் இந்த பேச்சில் கமல்ஹாசன் குறித்து கூறிய சர்ச்சைக் கருத்து கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் சினிமா ரசிகர்கள் பலரும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் முகம். அவர் தனது 5 வயதில் இருந்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி, கடந்த சில தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் முகமாக உள்ளார். இன்னும் சொல்லப்போனால் நடமாடும் சினிமா பல்கலைக் கழகமாக உள்ளார்.
இவரது திரை வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கம் இருந்துள்ளது. ஆனால் அவரது படங்கள் தமிழ் சினிமாவிற்கு பால் படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளது. இன்றைக்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எடுக்க காரணம் கமல்ஹாசனின் தெனாலி படம் தான் என்று பேட்டியில் கூறியுள்ளார். இப்படி பல ஆயிரக்கணக்கான உதாரணங்களை எடுத்துச் சொல்ல முடியும். ஆனால் முகத்தை மூடிக்கொண்டு வரும் அளவிற்கு கமல்ஹாசன் என்ன படத்தில் நடித்தார், அல்லது என்ன படம் கொடுத்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேநேரத்தில் சிலர் கமல் ஹாசனை தனது படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ராஜகுமாரன் முயற்சி செய்திருக்கலாம். அப்போது கமல்ஹாசன் நடிக்க மறுத்திருக்கலாம் அதனால் கூட ராஜகுமாரன் இப்படி பேசலாம் என்று சிலர் கூறி வருகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா என பலரும் நடித்துள்ளார்கள். படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











