இளையராஜா 83 வயசுல இப்படி பாடுறாரு.. 17 வருஷமா படம் பண்ணல.. இயக்குநர் ராஜீவ் மேனன் ஓபன் டாக்!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த விடுதலை 1 மற்றும் 2 உள்ளிட்ட படங்களில் தலைமை செயலாளர் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். அவரது உடல்மொழி, வசனம், நடிப்பு எல்லாமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர் தான் ராஜீவ் மேனன். அதன் பின்னர் 1997ம் ஆண்டு அரவிந்த் சாமி, பிரபுதேவா, கஜோல், நாசர் நடிப்பில் வெளியான மின்சாரக் கனவு படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

மம்மூட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் நடிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் அதற்கு பிறகு 17 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் இயக்காமல் இருந்தது ஏன் என்பது குறித்து சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மணிரத்னத்தின் ஃபேவரைட் கேமராமேன்: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய், குரு மற்றும் கடல் உள்ளிட்ட படங்களுக்கு ராஜீவ் மேனன் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவரது ஷாட் மற்றும் ஃபிரேமிங் சென்ஸ் எல்லாம் வேறலெவலில் இருக்கும். நடிகர்களை தனது லென்ஸ் வழியாக எந்தளவுக்கு அழகாக காட்ட முடியும் என்றும் ரசிகர்களை காட்சி ரீதியாக கவர என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் தான் ராஜீவ் மேனன்.

17 வருஷமா படம் இயக்கல: முதல் படமான மின்சாரக் கனவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து அவர் 2000ம் ஆண்டு மம்மூட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கிய கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் இன்று வரை பல ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருந்தாலும் அந்த படத்திற்கு பிறகு 17 வருடங்களாக எந்தவொரு படத்தையும் ராஜீவ் மேனன் இயக்கவில்லை. அதற்கு பதிலாக, விளம்பரப் படங்கள், இசைத் துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இயக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை எனக் கூறியுள்ளார்.

சர்வம் தாள மயம்: இசை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இசையை மையப்படுத்திய படத்தை இயக்கலாம் என கடந்த 2019ம் ஆண்டு சர்வம் தாள மயம் படத்தை ஜி.வி. பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளியை வைத்து இயக்கியிருந்தார் ராஜீவ் மேனன். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். விடுதலை 1, வெப்பன் மற்றும் விடுதலை 2 என வரிசையாக நல்ல கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்.

இளையாராஜா 83 வயசுல சூப்பரா பாடுறாரு: விடுதலை 2 படத்தில் நடித்த ராஜீவ் மேனன் இளையராஜா 83 வயதில் "தினம் தினமும் உன் நினைப்பு" என 30 வயது நபர் போல உற்சாகத்துடன் பாடுகிறார். கிளிண்ட் ஈஸ்ட்வுட் 60 வயதுக்கு மேல் இயக்குநராக மாறினார். அதன் பிறகு இசை மீது ஆர்வம் கொண்டு பாடல்களை உருவாக்கி ஆஸ்கர் விருது பெற்றார். யாருக்கு எப்போது எது வரும் எது கிடைக்கும்னு தெரியாது. சோஷியல் மீடியா உலகில் உங்களுக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் நீங்க அவ்ளோதான் காலி என்கிற அளவுக்கு விமர்சனங்கள் குவிகின்றன. ஆனால், நான் படம் இயக்கவில்லை என்றாலும், அதை விட அதிகமாக அந்த 17 ஆண்டுகளில் சம்பாதித்தேன். மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்வதும் புதிய விஷயங்களை எக்ஸ்ப்ளோர் செய்வதும் தான் மிகப்பெரிய சாதனை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











