Nanguneri issue: கல்விக் கூடங்களிலேயே சாதி இருட்டு.. நாங்குநேரி சம்பவம்.. ராஜுமுருகன் கண்டனம்
சென்னை: திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது 14 வயது தங்கையையும் சாதி வெறிக் காரணமாக சில மாணவர்கள் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய சம்பவத்துக்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், மோகன் ஜியை தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தங்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
நாங்குநேரியில் சாதிய அவலம்: நாங்குநேரியில் 17 வயது மாணவன் மற்றும் அவனது 14 வயது தங்கை இருவரையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் பள்ளியில் நடந்த தகராறு காரணமாக நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகன் காட்டம்: "கல்விக் கூடங்கள் தான் ஒரு தேசத்தின் நம்பிக்கை... அங்கேயே சாதி என்னும் இருட்டும் ரத்தமும் பரவி கிடப்பது எவ்வளவு பெரிய அவநம்பிக்கை..? சாதி என்னும் கொடிய விஷம் இன்னும் எத்தனை தலைமுறைகளை விழுங்க போகிறது..?" என ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் தனது காட்டமான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் கண்டனம்: கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும் என மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

"தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.. சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" என ஜிவி பிரகாஷ் கொந்தளித்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் பொது மக்களும் சாதி ரீதியாக நடந்த இந்த பிரச்சனைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

"மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டி கொள்கிறேன்.. இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்.." என திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











