மலை மேல் ஒருநாள்.. தொலைந்துபோன செருப்புகள்.. சினிமாவாக்க நினைத்த இயக்குநர் ராம்
சென்னை: ராம் இயக்கத்தில் பறந்து போ திரைப்படம் ஜூலை நான்காம் தேதி வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா முதன்முதலில் ராமுடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அவரும், மாரி செல்வராஜும் நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராம். தனது படங்கள் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தமிழ் சினிமா நுழைவதற்கான கதவுகளை திறந்து வைத்தவர். அதுமட்டுமின்றி அவர் இயக்கும் படங்களும், அதில் இடம்பெறும் கருத்துக்களும் மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெறுபவை. முதல் படமான கற்ற்து தமிழில் அவர் பேசிய விஷயம் அதுவரை பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
க்ளாஸிக் இயக்குநர்: தனது குருநாதர் பாலுமகேந்திராவிடம் கற்றுக்கொண்டதையும், தன்னிடம் உள்ள திறமையையும் சரியாக கலந்து தனது படைப்புக்களில் கொடுக்கும் ராம் இப்போது பறந்து போ படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மிர்ச்சி சிவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நாளை மறுநாள் (ஜூன் 4) படம் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பெரிய எதிர்பார்ப்பு: தங்க மீன்கள் படத்தில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாசம், உணர்வு உள்ளிட்டவைகளை பேசிய ராம்; இந்தப் படத்தில் தந்தை - மகன் உறவை பேசியிருக்கிறார். முக்கியமாக எப்போதுமே தனது படங்கள் மூலம் பார்ப்பவர்கள் மனதை கனக்க வைக்கும் இயக்குநர்; இதில் படு ஹியூமராக தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லியிருப்பதாக படம் பார்த்த செலிபிரிட்டிகள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாலா சொன்னது: இயக்குநர் பாலாவோ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியபோது, 'விமர்சகர்களின் பாதம் தொட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்; இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். ராம் நமக்கு தேவைப்படும் இயக்குநர்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பாலாவே எமோஷனாக பேசியது பலருக்கும் ஆச்சரியம்தான். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் மாரி செல்வராஜும், ராமும் உரையாடினார்கள்.
ராம் சொன்னது: அப்போது பேசிய ராம், "நானும் மாரி செல்வராஜும் நாகர்கோவிலில் ஒரு மலை மேல் ஏறினோம். ஏறும்போது செருப்புகளை கழற்றிவைத்துவிட்டு சென்றேன். கீழே இறங்கியபோது செருப்புக்களை காணவில்லை. ஏனென்றால் நாங்கள் வேறு இடத்தில் இறங்கியிருக்கிறோம். மலை மேல் ஏறிய வழியிலேயே மீண்டும் இறங்க முடியாது. மலையாகவே ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வழி கொடுக்கும். யாருமே மலையில் ஏறும்போது விட்டு சென்ற செருப்பை மீண்டும் இறங்கி வந்து எடுக்க் முடியாது.
சினிமாவாக்க முயற்சி: அந்த சம்பவத்தை கதையாக யோசித்தேன்" என்றார். அவரை தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், 'ஒருமுறை ஊட்டியில் ஒரு மலையில் ஏறினோம். பள்ளத்தாக்கு தெரியாத அளவுக்கு மேகமூட்டமாக இருந்தது. நாங்கள் ஒரு நாள் முழுவதும் அங்கேயே அமர்ந்து பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். மாலைவரை மேகமூட்டம் விலகவில்லை; நாங்களும் வந்துவிட்டோம். உடனே ராம் சார், என்னிடம் இந்த ஒரு நாள் அனுபவத்தை ஒரு படமாக எடுக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படித்தான் அவரிடம் ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications











