Thug Life விவகாரம்.. போக்கிரித்தனம் செய்யறீங்களா? கர்நாடக திரைத்துறையை தெறிக்கவிட்ட ராம்கோபால் வர்மா
பெங்களூரு: சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன். இவரது 234 வது படம் தக் லைஃப். இந்த படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று படத்திற்கு கர்நாடகாவில் தடையும் விதித்துள்ளார்கள். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாக வாய்ப்புகள் இல்லவே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டமாக பதில் அளித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தக் லைஃப் படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், படத்தின் கதை உருவாக்கத்திலும் பணியாற்றியவர் கமல்ஹாசன். மேலும் படத்தை கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் என இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், பக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் வந்தது என்ற கருத்தைச் சொன்னார். அதற்கு கன்னட அமைப்புகள் தொடங்கி, கர்நாடக மாநில முதலமைச்சர், அமைச்சர், திரைப்படச் சம்மேளனத் தலைவர் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும், கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுகிறார். கமல்ஹாசன் கன்னட மொழியை இழிவு படுத்தி விட்டார். அவர் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டால்தான் தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று மிரட்டினார்கள்.

தியேட்டரைக் கொளுத்துவோம்: தமிழர்களைக் கவர கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளில் தக் லைஃப் படத்தை திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம் என்று கன்னட ரஷன வேதிகே அமைப்பு தலைவர் நாராயண கவுடா தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்கிரித்தனம்: இந்நிலையில் தெலுங்கு மற்றும் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " ஜனநாயகத்திற்கு மற்றொரு பெயர் சகிப்புத்தன்மை இல்லாதது என்று மாறிவிட்டது போல. கமல்ஹாசன் பேசியதில் உண்மைத்தன்மை இருந்தாலும் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு புதிய வகையான போக்கிரித்தனம்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











