கேஜிஎப் 2-வை 15 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை... பிரபல இயக்குநர் ஓபன் டாக்
ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜூனா, அமலா, ரகுவரன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஷிவா திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ராம்கோபால் வர்மா. இப்படம் நாகர்ஜூனா கெரியரில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் இருந்தது. பின்னர், இந்தியில் வெளியான சத்யா, ரங்கீலா படங்களின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் ராம்கோபால் வர்மா. ராம்கோபால் வர்மா படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுப்பதில் வல்லவர் என்ற தனித்த அடையாளத்தை பெற்றுள்ளார்.
ராம்கோபால் வர்மாவும் சர்ச்சையும்: இந்தி, தெலுங்கு மொழிகளில் பட படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணம் குறித்த கதை கொண்ட படத்தினை வியூகம் என்ற பெயரில் எடுத்திருந்தார். இப்படத்தில் அஜ்மல் நாயகனாக நடித்தார். மனதில் பட்டதை பேசுவதால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. மேலும் பிரபல ஆபாச நடிகை, மியா மால்கோவா நடிப்பில் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் என்ற ஆபாச படத்தை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு குறித்தும் அவதூறாக பேசி மாட்டிக்கொண்டார்.
மோசடி வழக்கில் சிக்கிய ராம்கோபால்: கடந்த 2018ஆம் ஆண்டு, மகேஷ்சந்திர மிஸ்ரா என்பவரின் ஸ்ரீ நிறுவனம் இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் நிறுவனத்துக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ரூ.5,000 பணம் செலுத்தி ராம்கோபால் வர்மா பிணையில் வந்தார். மேலும், பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
ரஜினியை சீண்டும் இயக்குநர்: முன்னதாக இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தினை குழந்தைகளுக்கான படம் என கிண்டல் அடித்தார். தொடர்ச்சியாக இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் ராம்கோபால் வர்மா தனது பாணியை மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை என பலரும் கிண்டல் அடித்துள்ளனர். தமிழில் முன்னனணி நடிகரான ரஜினியை அவ்வப்போது வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்தில் ஸ்லோமோஷன் காட்சிகள் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த அளவிற்கு மாஸ் கிடைத்திருக்காது என கிண்டல் அடிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதே பாணியில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இந்திய அளவில் மாபெரும் வசூலை பெற்ற கேஜிஎப் -2 படத்தை கிண்டல் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் தொடர்ச்சியாக தென்னிந்திய நடிகர்களை கிண்டல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கேஜிஎப் 2 படத்தை பார்க்க முடியவில்லை: இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரித்துள்ள சாரி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒருதலை காதல் மற்றும் சைக்கோ த்ரில்லர் கதையாகவும் இருப்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், சாரி படம் குறித்த புரோமோஷன் நிகழ்வில் பேட்டி அளித்த அவர், கேஜிஎப் 2 படத்தை தொடர்ந்து 15 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
கிண்டல் செய்த ராம்கோபால் வர்மா: கேஜிஎப் 2 படத்தை தொடர்ச்சியாக 15 நிமிடம் பார்க்க முடியாமல், வீட்டு பால்கனியில் நின்று யோகா பயிற்சி செய்தேன். அந்த தாக்கத்திலிருந்து வெளியே வர முயற்சித்தேன். நிதானமாக மூச்சு பயிற்சி எடுத்த பின்பும் மறுபடியும் கேஜிஎப் 2 வை பார்க்க தொடங்கினேன், அப்படி இருந்தும் பார்க்க முடியவில்லை, எனக்கு மட்டும் தான் இப்படியா என என்னை சோதிப்பதற்காக எனக்கு தெரிந்த எழுத்தாளருடன் அமர்ந்து பார்த்தபோதும் அவரும் அதே கருத்தை தான் தெரிவித்தார் என ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். படம் வெற்றி பெறுவது நம் கையில் இல்லை, ஆனால், மற்றவர்களுக்கு பிடித்ததால் வெற்றி பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











