அனைவரையும் திருப்தி படுத்த முடியாது.. மைக்கேல் விமர்சனத்திற்கு இயக்குநரின் நச் பதில்!
சென்னை : அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை என மைக்கேல் பட விமர்சனத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷன், கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடித்துள்ளார்.
மேலும், விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மைக்கேல்
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிப்ரவரி 3ந் தேதி திரையரங்கில் மைக்கேல் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதை
90களின் காலகட்டங்களில் நடக்கும் ஒரு கதைதான் மைக்கேல். கேங்க்ஸ்டராக வேண்டுமென்ற கனவோடு ஹீரோ சந்தீப் கிஷான் மும்பைக்கு வருகிறார். அங்கு பெரிய டான இருக்கும் குருவை ( கௌதம் மேனன்) ஒரு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி, அவரின் ஆஸ்தான அடியாள் ஆகி விடுகிறான் மைக்கேல் (சந்தீப் கிஷான்).

கேங்ஸ்டர் மகளுடன் காதல்
இதையடுத்து, சில பொறுப்புகளுடன் டெல்லிக்கு வரும் மைக்கேல், அங்கு குருவின் மகளான தீராவை (திவ்யான்ஷா) காதலிக்கிறான். அதன் பின் விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி ஆகியோர் கதையில் வருகிறார்கள். மைக்கேலின் கேங்ஸ்டர் கனவு என்ன ஆனது, அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீது கதை.

அனைவரையும் திருப்தி படுத்த முடியாது
3ந் தேதி திரையரங்கில் வெளியான இந்த படம் சுறுசுறுப்பு இல்லாமல் ஆமை வேகத்தில் செல்வதாக, பல நெகடிவ் விமர்சனங்கள் வந்ததை அடுத்து, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது ட்விட்டர் பக்கத்தில், எனது எல்லா படைப்புகளை போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கு என் 100% உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும்.

இயக்குநர் ட்வீட்
மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு நன்றி, மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன். உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்க காத்திருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன் என இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











