விஜய்யை நினைத்து கண்ணீர்.. One Last Dance.. பாடலாசிரியர் விவேக்கை பாராட்டிய இயக்குநர் ரத்ன குமார்!
சென்னை: நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். அவரது தமிழக வெற்றிக் கழகத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு தயார் படுத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி படமான ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரிலீஸ் செய்யப்பட்ட அறிவிப்பு வீடியோவில் இடம் பெற்றிருந்த பாடல் வரிகள் விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.இப்படி இருக்கும்போது, இயக்குநர் மற்றும் கதாசிரியர் ரத்னகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பாடலாசிரியர் விவேக்கிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தளபதி விஜய் அரசியலுக்குச் சென்றாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் தான் இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவதில்லை, தான் அரசியலுக்கு செல்வதால் சினிமாவை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும்போது இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகவுள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹெச். வினோத் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

குறிப்பாக, " நீ குடுத்த சிரிப்பும்,
இப்ப தனியா கிடக்கு!
உன்னை சுமந்த சிம்மாசனம்,
தனியா கெடக்கு!

உன்னை பார்த்து எழும் கூச்சல்,
அது தனியா இப்போ கெடக்கு!
நடனமிடும் கால்கள்,
அது தனியா இப்ப கெடக்கு!
உன்ன ரசிச்ச கூட்டம்,
அது தனியா இப்ப கிடக்கு!" இந்த வரிகள் பலரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வார்த்தைகளாக உள்ளது. இப்படி இருக்கும்போது இயக்குநர் ரத்னகுமார், இந்த வரிகளைக் குறிப்பிட்டு, பாடலாசிரியர் விவேக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், " இந்த வரிகளுக்கு நன்றி விவேக் ப்ரோ. பலபேரின் புலம்பலுக்கு வார்த்தை வடிவம் கொடுத்து இருக்கீங்க. யார் பெற்ற மகனோ என்ற பாடல் வரிகள் தசைகளையே உருக்கும் அளவுக்கு உள்ளது. அனிருத்துக்கும் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











