‘பெண்களே ஏன் இப்படி அவுத்துப்போட்டு காட்டுறீங்க’.. இயக்குநர் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனம்
சென்னை: மணி பிரசாத் என்பவர் இயக்கியிருக்கும் திரைப்படம் என் சுவாசமே. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மூத்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். விழாவில் உதயகுமார் பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியது அங்கிருப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. மேலும் அவருக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் 90களில் பிரபலமான இயக்குநராக இருந்தவர். சின்னக்கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் அவர். சின்னக்கவுண்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியை பார்த்த ரஜினிகாந்த்தே உதயகுமாரை அழைத்து தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படிதான் எஜமான் திரைப்படமும் உருவானது. ரஜினிகாந்த் நினைத்தபடியே அந்தப் படமும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையும் சேர்ந்தே வந்தது: ஆர்.வி.உதயகுமாரின் படங்கள் ஹிட் ஆனாலும் அவர் குறிப்பிட்ட சமுதாயத்தை உயர்த்திப்பிடிக்கிறார் என்றும்; ஒடுக்கப்பட்ட மக்களை மட்டமாக காண்பித்தார் என்றும் சர்ச்சைகள் எழுந்ததுண்டு. இப்போதுகூட தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பேசும் படங்கள் வந்தால் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் அந்த விமர்சனங்களுக்கு ரசிகர்களோ, 'சின்னக்கவுண்டர்', 'எஜமான்' உள்ளிட்ட படங்கள் எல்லாம் ஆதிக்க சமுதாயத்தினரை தூக்கி பிடித்தன. அப்படி படங்கள் எடுத்த உதயகுமாருக்கு வராத கண்டனங்களும், விமர்சனங்களும் எதற்காக பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோருக்கு வருகின்றன என்ற கேள்வியை வைப்பதுண்டு.
சர்ச்சை பேச்சு: இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் ஆர்.வி.உதயகுமார் சில படங்களில் நடிக்க செய்திருக்கிறார். இந்நிலையில் என் சுவாசமே என்ற படத்தை மணி பிரசாத் என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பெண்கள் பற்றி பேசியிருப்பது கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது.
பெண்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள்: விழாவில் பேசிய உதயகுமார், "மேடையில் ஒருவர் சொன்னார். பெண்ணியம் பேசுபவர்களே பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்று. நான் சொல்கிறேன். பெண்கள் தங்களை தாங்களே அவுத்துப்போட்டு காண்பிக்கிறார்கள். பெண்களே ஏன் இப்படி அவுத்துப்போட்டு காட்டுறீங்க என்று அவர்களை பார்த்துதான் கேட்க வேண்டும். எப்படி எல்லாம் தெரியும்படி உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள் ஆராய்ச்சி செய்வார்கள் போல.
மலையாளம்னா பிட்டுதான்: தமிழ் சினிமாவைக்கூட காப்பாற்றிவிடலாம். ஆனால் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பெண்கள் அவர்களாகவே வீடியோ எடுத்து போடுகிறார்கள். அதனை பார்ப்பவர்களை எப்படி காப்பாற்ற முடியும். தமிழர்களுக்கு மலையாளிகளை ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவர்களுக்குத்தான் தமிழர்களை பிடிக்காது. முன்பெல்லாம் மலையாளத்திலிருந்துதான் பிட்டை வாங்கி வந்து இங்கு ஓட்டுவார்கள்.
அதில் வல்லவர்கள்: மலையாளிகள் எப்படி நல்ல படங்கள் எடுப்பதில் வல்லவர்களோ. அதேபோல் பிட் எடுப்பதிலும் வல்லவர்கள்தான். அவர்கள்தான் அதனை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர்களும்கூட. எத்தனையாவது ரீலில் பிட் வருகிறது என்று கேட்டுவிட்டு; அந்த ரீலை மட்டும் பார்த்துவிட்டு எழுந்து போனவர்கள் எல்லாம் உண்டு" என்றார். பெண்கள் குறித்து இவ்வளவு மட்டமாக ஆர்.வி.உதயகுமார் பேசியபோது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி முகம் சுழித்தபடி நின்றார். மேலும் மூத்த இயக்குநர் இப்படி பேசியிருக்கவே கூடாது. அவர் இப்படி பேசும்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளவாசிகள் காட்டமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











