twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் பெய்யெனப் பெய்யும் மழை!

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    நூற்றாண்டு காணப்போகும் தமிழ்த் திரையுலகுக்கு இயக்குநர்கள் வழங்கிய பங்களிப்பையே முதன்மையானதாய்க் கூற வேண்டும். நாம் முன்பே சொன்னதைப் போலவே பெரும்போக்குகளை இங்கே நிகழ்த்தியவர்கள் என்று பார்த்தால் இயக்குநர்களுக்கே முதலிடம். ஒரு படத்திற்கு அதன் இயக்குநரே கப்பல் தலைவர். தலையாய இடம் அவர்க்கே வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்காற்றியிருந்தாலும் அது இயக்குநரின் படமே. எவ்வொரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டாலும் அது ஓர் இயக்குநரின் கலைவினையே. அப்படித்தான் முன்பு இருந்தது.

    ஓர் இயக்குநர் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு ஈடுபாட்டோடு செய்தாக வேண்டும். அப்போதுதான் அவர் நினைக்கின்ற திரைப்படம் உருவாகும். இல்லாவிட்டால் பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்காக முடிந்துவிடும். படத்திற்கான வாய்ப்பைப் பெறுவது அரும்பாடு என்றால் அந்தப் படம் தொடங்கப்பட்ட நாள்முதல் முடிக்கும்வரை ஓர் இயக்குநர் படுவது பெரும்பாடு. வீட்டுப் பக்கம் போய் ஆறு மாதம் ஆயிற்று என்று கூறுகின்ற இயக்குநர்களைப் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்புக்கான அணியங்களைச் செய்வது, படம்பிடிப்பது, பின்னர்ப் படக்கோப்பு மற்றும் ஒலியொட்டு வேலைகள் என அவர்கள் தம் முழு நேரத்தையும் அலைவதிலும் அலுவலகத்திலுமே கழிக்கின்றார்கள். ஒருவகையில் அது ஒரு தவம்தான். ஒரு படத்தைத் தவம்போல் எண்ணிச் செய்தவர்களே வென்றார்கள்.

    Director's role in making a movie

    தமிழ்நாட்டில் பலர்க்கும் இயக்குநர் ஆவது என்னும் கனவு இருக்கிறது. தாம் இயக்குநராக வேண்டும் என்ற எண்ணவிதை விழுந்த நிகழ்ச்சியை இயக்குநர் பாலுமகேந்திரா நினைவு கூர்ந்த ஒன்று இங்கே கருதத்தக்கது. இளமையில் அவர் இலங்கையில் இருந்தபோது ஒரு படப்பிடிப்பை நேரில் காணும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. 'தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வை' என்னும் திரைப்படப்பிடிப்பு அது. அதன் இயக்குநர் டேவிட் லீன். அந்தப் படப்பிடிப்பை ஓர் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு பாலுமகேந்திராவுக்குக் கிட்டியிருக்கிறது. அடுத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிக்காக 'பெய்க மழை (Rain)' என்று கட்டளையிடுகிறார் இயக்குநர். அடுத்த நொடியில் படப்பிடிப்புத் தளத்தில் மழை பெய்கிறது. எடுக்கப்படவேண்டிய காட்சி அம்மழையில் எடுக்கப்படுகிறது. காட்சி எடுக்கப்பட்டவுடன் மழை நிற்கிறது. இந்தக் கட்டளையும் மழைப்பொழிவும் பாலுமகேந்திராவின் மனத்தைக் கொய்துவிட்டன. 'பெய்யெனப் பெய்யும் மழை' ஓர் இயக்குநரின் கட்டுக்குள் இருக்கிறதென்றால் அவரே பன்வல்லமை மிக்க ஒரு பணிவல்லார் என்பது அவர்க்கு விளங்கிவிட்டது. அன்று தொட்டுத் தாம் இயக்குநர் ஆவதையே கனவாகக் கொண்டு அவ்வாறே ஆனார்.

    கட்டளையிடும் பணிக்கு எல்லாரும் ஏங்குவது விளங்கிக்கொள்ளக் கூடியது. படப்பிடிப்புத் தளத்திற்கு ஓர் இயக்குநரே அரசர் என்பதைப்போன்ற நிலை. அவர் சொன்னபடி நூற்றுவர் அடங்கிய பெருங்குழு பணியாற்றுகிறது. ஓர் இயக்குநரின் மனத்தில் என்ன இருக்கின்றதோ அதையே நிறைவேற்றித் தருவதற்கு அந்தக் குழு தொழிற்படுகிறது. அதற்காக அவர் இடும் கட்டளைகளுக்குக் காத்திருக்கிறது. அதற்கேற்பக் கீழ்ப்படிகிறது. அந்த தலைமைப் பணிக்காகத்தான், அந்த ஆட்சிப் பணிக்காகத்தான் ஒருவர் இயக்குநராக வேண்டும் என்று விரும்புகிறார்.

    ஒரு படத்தில் இயக்குநரையே எல்லாவற்றையும் இயக்கி முடிக்கிறாரா என்றால் இல்லைதான். முற்காலத்தில் ஓர் இயக்குநர்தான் எல்லாவற்றையும் செய்தார். நடனப் பயிற்றுநரின் உதவியுடன் அவரே பாடல் காட்சிகளை எடுத்தார். சண்டைக் கலைஞர்களைப் பயன்படுத்தி ஒரு சண்டைக் காட்சியை எடுப்பதில் இயக்குநர் பங்காற்றினார். இன்றைக்கு ஓர் இயக்குநர் பாடல் காட்சிகளையோ சண்டைக் காட்சிகளையோ படம்பிடிக்கும் இடத்தில் இருக்கின்றாரா என்பதே ஐயம்தான். நடன இயக்குநர் ஒரு பாட்டை எடுத்துக் கொடுக்கிறார். சண்டைக் காட்சியை அதற்குரியவர் எடுத்துக் கொடுக்கிறார். நடன இயக்குநர்கள் எல்லாரும் ஆளுக்கொரு படங்களை இயக்கிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அந்தத் துணிவு எங்கே இருந்து வந்தது என்று நினைக்கிறீர்கள் ? எல்லாம் பாட்டெடுத்த பழக்கம்தான்.

    ஒரு படத்தில் யார் யாரோ சுடுவுக்கோணங்களை முடிவு செய்கிறார்கள். வேறென்ன மீதம் இருக்கிறது ? கதை மாந்தர்கள் பேசிக்கொள்ளும் உரையாடல் பகுதிதான் மீதம் இருக்கிறது. ஓர் இயக்குநர் அதைத்தான் எடுத்துக் கொடுக்கிறார். அந்த 'உரையாடல் பகுதி'யை எடுத்துக்கொடுக்க அவர் எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. அதையும்கூட அவரே எடுக்கிறார் என்று சொல்ல முடியாது. அவருடைய தலைமை உதவியாளர் இறங்கி வேலை செய்கிறார். இறுதியில் என்னாகிறது? தோல்விப் படமொன்று உருவாகி வெளியாகி எல்லாரையும் சோதித்து விடுகிறது. ஓரிடத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது, இன்னோரிடத்தில் படக்கோவைப் பணியிலோ காசு புரட்டிவரும் அலைவிலோ அதன் இயக்குநர் ஈடுபட்டிருக்கிறார். இப்படித்தான் படங்கள் உருவாகின்றன. ஓர் இயக்குநர் அங்கே கலைப்பணியிலிருந்து விடுபட்டிருக்கிறார். அவர் உள்ளம் நினைத்தது உருவாகாமல் குத்து மதிப்பாக ஒன்று உருவாகிறது.

    இவ்விடத்தில்தான் ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்ற பழம்பெரும் இயக்குநர்கள் தனித்துத் தெரிகிறார்கள். ஸ்ரீதர் அவராகவே ஏதேதோ புதிதாக முயன்று பார்ப்பவர். பாலசந்தர் தம் படங்களின் ஒவ்வொரு கோணத்தையும் உரையாடலையும் ஏற்ற இறக்கங்களையும் அவரே முடிவு செய்து அமைத்திருக்கிறார் என்பதை உணர முடியும். பாலசந்தர் படத்தின் பாடல்களில்கூட பாலசந்தர் தெரிவார். அவர் தெரியாத சில படங்கள் தோற்றன. அதற்கு எடுத்துக்காட்டு டூயட் என்னும் படம். படக்காட்சிகள் தோறும் அவர் நின்று இயக்கிய விதம் தெரியும். அந்த இயக்கத்திறன்தான் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' என்ற பாடலை உருவாக்குகிறது. அப்பாடல் முடிவில் காதலன் மார்பில் காதலி தோய்வதும், காதலன் தாழ்ந்து நோக்குங்கால் மேலும் மார்பில் சாய்ந்தபடியே பெண்முகம் புதைவதும் என ஒரு கவிதையை வரைகிறது. ஓர் இயக்குநர்க்குப் பாடல் என்பது அருமையான வாய்ப்பு. அத்தகைய பாடல் காட்சிகளே இன்றைய படங்களில் இல்லை. ஏனென்றால் இன்றைக்கு ஒரு பாடலைச் சிந்திக்கும் திறமை நம் புதியவர்களிடம் அருகிப்போய்விட்டது. இன்றைய இயக்குநர்களின் சாதனை மதுக்கடைப் பாடல்கள்தாம். பாலசந்தர் அப்படி என்றால் பாரதிராஜா இன்னும் ஒருபடி மேலே செல்வாராம். நடன அசைவுகளைக்கூட அவரே கற்றுக்கொடுப்பதுண்டாம். அதற்காக நடனக் கலைஞர் சங்கத்திடம் அவர் தயங்காமல் தண்டம் செலுத்திவிடுவாராம். பாலுமகேந்திரா தம் படப்பாடல்களைப் பின்னணிக்குப் பயன்படுத்தியே காட்சியை எடுப்பவர். பாத்திரங்கள் நடந்தபடியும் பேசிக்கொண்டும் தம் இயல்புகளில் மூழ்கியிருக்க, பின்னணியில் பாடல் ஒலிக்கும்.

    இவை ஒரு பக்கம் என்றால் இப்போது வரும் கணினிவரை படங்கள் ஓர் இயக்குநரை மேலும் வெளியேற்றி நிறுத்துகின்றன. அங்கே ஓர் இயக்குநர் தமக்குத் தேவையானவற்றைப் பணிப்புச் செய்து பெற்றுக்கொள்ளும் இடத்தில்தான் இருக்கிறார். படைக்கும் இடத்தில் இருக்கின்றாரா என்பது கேள்விக்குறியே. இலக்கியத்தில் 'எழுதியவர் இறந்துவிட்டார்' என்ற ஒரு கோட்பாடு தலைதூக்கியது. திரைத்துறையில் வேறு வகையில் அவ்வகைப் போக்கு இயக்குநர்க்கு நேர்கின்றதோ என்று ஐயப்பட வேண்டிய நேரமிது.

    English summary
    Nowadays film director's role in making a movie is reducing much.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X