twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடும்பத்தோட பார்க்கிற மாதிரி நான் எடுக்கும் முதல் படம் கங்காரு! - இயக்குநர் சாமி

    By Shankar
    |

    Director Saami
    'உயிர்', 'மிருகம்', சிந்துச் சமவெளி என கான்ட்ராவர்சி படங்களையே தொட்டுப் பார்த்து பரபரப்புக்குள்ளாகிய இயக்குனர் சாமியின் அடுத்த படம் கங்காரு.

    அமைதிப்படை 2 தயாரித்த 'வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி, வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, இவர்களுடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து இயக்குகிறார் சாமி.

    இந்தப் படம் குறித்து சமீபத்தில் சாமியிடம் பேசினோம். அந்த சந்திப்பிலிருந்து...

    அது என்ன கங்காரு?

    வாழ்கையில சந்தோஷம், துக்கம், அழுகை, சிரிப்பு, பாசம்னு ஏதோ ஒரு விஷயத்தை தெரிஞ்சோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ சுமந்துகிட்டுதான் திரியறோம். அப்படி மனசாலும், உடம்பாலும் ஒரு ஜீவனை இன்னொரு ஜீவன் வாழ்நாளெல்லாம் சுமந்து திரிவதுதான் 'கங்காரு'.

    எப்போதும் போல இதுவும் சர்ச்சைக் கதையா?

    ரெண்டு விஷயங்களை கோடிட்டு காட்ட விரும்புகிறேன் . சிந்து சமவெளி படத்தின் புரோமோஷனுக்காக ஒரு தனியார் தொலைக்கட்சிக்கு சென்றிருந்தேன். 'சரவணன் மீனாட்சி' புகழ், 'கண்பேசும் வார்த்தைகள்' ஹீரோ செந்தில்தான் என்னை பேட்டி எடுத்தார். அப்போது அவர் என்னிடம், ஏன் சர்ச்சைக்குரிய படங்களையே எடுக்குறீங்க? ஏன் வேறு மாதிரி எடுக்கலைன்னு கேட்டார். அப்போது அவருக்கு நான் சொன்ன பதில் எனக்கு நானே வைத்துக்கொண்ட ஒரு பரிசோதனை முயற்சின்னுதான் சொல்லணும்.

    எனக்கு நல்ல படம் எடுக்ககூடாதுன்னு ஒண்ணும் இல்லை. எனக்கு சர்ச்சைக்குரிய படம் பண்ணத்தான் வாய்ப்பு கிடைச்சது. அதுவுமில்லாம முந்தைய ரெண்டு சர்ச்சைக்குரிய படங்களும் ஓடினதால மூணாவது படமும் அப்படியே எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இப்போ சொல்றேன்.. தமிழ் ரசிகர்களுக்கு சொரணை இருந்தால் என் 'சிந்து சமவெளி' படத்தை புறக்கணிக்கட்டும். பார்க்காமல் தவிர்க்கட்டும்.. அப்போ நான் என் ரூட்டை மாற்றிக்கொள்கிறேன் என்று அவரிடமும் மக்களிடமும் சவால் விட்டேன். மக்களும் அந்த படத்தை தவிர்த்தாங்க. நானும் இப்போ என் ரூட்டை மாத்திக்கிட்டேன்''.

    அடுத்து அதே சிந்து சமவெளி படத்துக்காக சமூக ஆர்வலர்களும், சமுதாயக் காவலர்களும் என் வீட்டை, காரை அடித்து நொறுக்கினார்கள். அந்த சமயத்துல எங்கம்மா ஏம்பா இப்படி நடக்குது? குடும்பத்தோட உக்கார்ந்து பார்க்குற மாதிரி ஒரு படம் எடுக்கக்கூடாதான்னு கேட்டாங்க. இதோ தமிழ் நாட்டுல உள்ள அம்மாக்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுக்க உள்ள எல்லா அம்மாக்களுக்கும், என் அம்மாவுக்காகவும் சேர்த்து ஒரு படம் எடுக்குறேன். அது இந்த கங்காரு. தாய்ப்பாசத்துக்கு உட்சபட்ச உதாரணம் கங்காரு.

    ஏன் பாலியல் ரீதியான களம் பக்கம் போனீங்க?

    உயிர் படத்துக்கான கதை உருவான சமயம் அந்த அண்ணி நல்லவங்களாத்தான் இருந்தாங்க. காதலுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டு சாவாதீங்க. காதலை விட உயிர் பெருசு என்பதை சொல்ற ஒரு நல்ல கதையாத்தான் அது இருந்தது. அந்தக் கதையை கேட்ட எல்லா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கதை நல்லா இருக்கு ஆனா ஏதோ ஒன்னு குறையுதுன்னு சொன்னாங்க. அப்போ என்கிட்டே இருந்த உதவியாளர் ஒருவர் அண்ணி கேரக்டரை நெகட்டிவ்வா மாத்திடலாம்னு சொன்னார். அப்படி நான் மாத்தினதுக்கப்புறம் ஐந்து கம்பனியில அட்வான்ஸ் கொடுத்தாங்க. ஆறாவதா ஆர். பாலாஜி சார் எடுத்தார்.

    அதன்பிறகு நான் பண்ண நினைச்ச படம் விளையாட்டை மையமா வைத்து சதம்னு ஒரு படம். அது இருபத்தைந்து லட்ச ரூபா செலவு பண்ணி தொடர முடியாமல் போனது. அதன்பிறகு கிடைத்த படம் மிருகம். அதை சர்ச்சைக்குரிய படம்னு சொல்ல முடியாது. எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம்கிறதால செக்ஸையும் சேர்த்து சொல்லவேண்டியிருந்தது.

    அதன்பிறகு பண்ணிய படம் ராஜ்கிரணுடன் சரித்திரம். சிலம்ப விளையாட்டை மையமா வச்சி எடுத்த படம். தொண்ணூறு சதவீதம் முடிச்சும் மீதிய முடிக்க முடியல. அந்த சமயத்துல எனக்கு கிடைச்ச வாய்ப்புதான் சிந்து சமவெளி. அந்த படத்தின் தயாரிப்பாளரும் நிர்வாகத் தயாரிப்பாளரும் சர்ச்சைக்குரிய கதைதான் வேணும்னு கேட்டாங்க. அப்போ ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கேனிவ்வோட முதல் காதல் என்கிற குறு நாவல் பற்றி சொன்னேன். அதையே தமிழுக்கேற்ப மாற்றி செய்யச் சொன்னாங்க. அப்படி உருவானதுதான் சிந்துசமவெளி.

    சினிமாவுல கவனிக்கப்படணும்.. ஒரு இடத்தைப் பிடிக்கணும்கிறதுக்காக ஓடுற இயக்குனர்களில் நானும் ஒருத்தன். எனக்கு கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு கதைக்கான நேர்மையோட ஒவ்வொரு படத்தையும் எடுத்திருக்கேன். நேர்மையோடான்னு நீங்க கேக்குறது புரியுது. உதாரணமா, சிந்துசமவெளி படத்தில் நிறைய செக்ஸ் காட்சிகளை வைத்திருக்க முடியும். ஹீரோயினை இன்னும் தோலுரித்துக் காட்சிப்படுத்தியிருக்க முடியும். அப்படிப்பட்ட கதை அது. எல்லா விதத்திலும் இடம்கொடுக்கக்கூடிய அந்த படத்தில் நான் எந்த இடத்திலும் சதைக் காட்சிகள் வைக்கவில்லை. மாறாக கதையில் கவர்ச்சி இருந்தது. காட்சிகளில் அதைத் தவிர்த்திருக்கிறேன். இதிலிருந்து செக்ஸ் களத்திற்கு நானாக விரும்பிச்சென்றேனா அல்லது தள்ளப்பட்டேனா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

    ''ஒருவேளை சிந்துச் சமவெளி வெற்றி பெற்றிருந்தால்?"

    எந்தவொரு இயக்குனருக்கும் ஒரே மாதிரி படமெடுப்பது சலிப்பூட்டும் விஷயமே. போதும் ரூட்டை மாத்து என்று வேறுவிதமாகத்தான் பயணப்பட்டிருப்பேன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. அதுக்கு நான் தயாராகத்தான் இருந்தேன். அதன் தொடக்கம்தான் கங்காரு.

    'கங்காரு டீம் பத்தி சொல்லுங்க?'

    அர்ஜுனா என்ற பையனை அறிமுகம் செய்கிறேன். பிரணயா, சுப்ரியா என்று இரு புதுமுக நாயகிகளும் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர். கதை என் உதவியாளர் எஸ் டி சாய் பிரசாத்துடையது. நான் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்குகிறேன். கவிப்பேரரசு வைரமுத்து எல்லா பாடல்களையும் பட்டை தீட்டி தந்திருக்கிறார். பாடல்கள் உங்களை நிச்சயம் உலுப்பும். பாடகர் ஸ்ரீநிவாஸ் தமிழில் இசையமைக்கும் முதல் படம் இது. முப்பத்தைந்து படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் காமிராவை கையாள, கலையை தோட்டாதரணி கவனிக்கிறார்.

    English summary
    After controversial movies like Uyir, Mirugam and Sindhu Samavali, director Saami is directing Kangaru.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X