பரபரப்பு பப்ளிசிட்டி கிடைத்தது, ஆனா பேரு கெட்டுப் போச்சே! - இயக்குநர் சாமி
‘உயிர்', ‘மிருகம்', ‘சிந்து சமவெளி' போன்ற சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற சாமி, ‘நல்ல பிள்ளை'யாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு'.
பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத் துரத்துகிறது. இதை உடைக்க, இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்த சாமி இப்போது பாசவுணர்வை தூக்கிப் பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு'.
எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் கங்காரு.

சாமி இப்படி ஒரு ஆசாமியா?
தன்மீது விழுந்த செக்ஸ் இயக்குநர் பற்றி அவர் என்ன நினைக்கிறார்?
"நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்த மாதிரி இங்கே நிலைமை இல்லை.யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. என்மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. சாமி இப்படிப்பட்ட ஆசாமி என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
என் தவறுதான்
என் படங்களை விமர்சித்தவர்கள் கூட சாமி அழுத்தமாகக் கதை சொல்லத் தெரிந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்தார்கள். அழுத்தமாகச் சொல்லத் தெரிந்ததால்தான் இவ்வளவு விமர்சனங்கள் வந்தன என்றும் என் நண்பர்கள் சொல்வதுண்டு.
எது எப்படியோ அது என் தவறுதான். பெயர் கெட்டுவிட்டது. மாற்ற வேண்டும். இனி நான் வேறு சாமி. இந்த சாமிக்குள் நிறைய கனவுகள் படைப்புகள் உள்ளன. அதற்குள் என்னை இப்படி தவறான முத்திரை குத்தி குறுகிய வட்டத்துக்குள் போட்டு அமுக்கி விட வேண்டாம். இந்த கெட்ட பெயரை மாற்றவேண்டும். துடைத்தெறிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்போது ‘கங்காரு' எடுக்கிறேன். இதன் மூலம் என் கெட்ட பெயரை மாற்றுவேன். இந்தப் படம் நிச்சயம் என் பெயரை மாற்றும்," என்கிறார்.
‘கங்காரு' நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும் எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.
முந்தைய படங்கள் பற்றி என் அம்மாவே என்னைத் திட்டியிருக்கிறார். ‘இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு ‘என்று. அந்த அம்மாவே பாராட்டும்படி இப்படம் இருக்கும்," என்கிறார்.
அமைதிப் படை 2-ம் பாகத்தை எடுத்த சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கும் அடுத்த படம் இந்த கங்காரு.


Click it and Unblock the Notifications











