விஜய் கருவிலிருந்தே சினிமாவிற்கு தயாரானார்.. ஷோபா சம்பாத்தியத்தில்தான் சாப்பிட்டேன்.. எஸ்ஏசி ஓபன்!
சென்னை: நடிகர் விஜய் தன்னுடைய தளபதி 69 படத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில், சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
தளபதி 69 படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் தான் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் ரிலீசுக்கு இத்தனை மாதங்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழாமல் இல்லை. தன்னுடைய அரசியல் மாநாட்டை இந்த மாத இறுதியில் வைத்துள்ளார் விஜய். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து அவர் செயல்படவுள்ள நிலையில், கட்சிப்பணிகளுக்கு இடையில் தளபதி 69 படத்திலும் அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படம் இவரது கடைசி படமாக மாறியுள்ள நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் படங்களில் நடிப்பதிலிருந்து விலக உள்ளதாகவும் அவர் தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பின்போதே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இந்த அவரது அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கிய நிலையிலும் அவர் மீண்டும் நடிக்க வருவாரா என்ற கேள்வியும் அவர்களுக்குள் எழுந்துள்ளது. இன்னும் ஒரு வருடம்தான் தளபதியை நாம் நடிகராக கொண்டாட முடியும் என்ற கருத்து ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
விஜய் அரசியல் என்ட்ரி: தன்னுடைய அரசியலை மையமாக வைத்து தற்போதே செயல்பட துவங்கியுள்ளார் விஜய். இந்த மாத இறுதியில் அவரது கட்சி மாநாடு நடக்க உள்ள நிலையில் அதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரத்தில் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக படத்தின் பாடல் காட்சி சென்னையில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில தினங்கள் கேப் எடுத்துக் கொள்ளும் விஜய், தொடர்ந்து கட்சி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் இதையடுத்து தளபதி 69 படத்தின் அடுத்த கட்ட ஷெட்யூல் திட்டமிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அப்பாவை சந்தித்த விஜய்: பல விஷயங்களை முன்னதாகவே யோசித்து செய்தவர் விஜய். தன்னுடைய அப்பாவிடம் கொண்ட பிணக்கையும் மறந்து விட்டு சமீபத்தில் அவர் தன்னுடைய அப்பா மற்றும் அம்மா இருவரையும் அவர்களது வீட்டில் சென்று பார்த்து அதன் புகைப்படங்களையும் மகிழ்ச்சியையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் விஜய்யின் அப்பாவும் பிரபல இயக்குநருமான எஸ்எஸ்சி பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் குறித்தும் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார்.
விஜய் குறித்து எஸ்ஏசி சுவாரஸ்யம்: தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகரை அவர் இசை கல்லூரியில் படித்த போதே தான் திருமணம் செய்து கொண்டதாகவும் இதை அடுத்து விஜய் கருவில் இருந்த ஒன்பது மாத காலங்களும் ஷோபா சந்திரசேகர் தொடர்ந்து இளையராஜா உள்ளிட்டவர்களின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தினந்தோறும் பாடுவார் என்றும் எஸ்ஏசி கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில் விஜய் வயிற்றில் இருக்கும்போதே தினந்தோறும் இசையை கேட்டு வளர்ந்ததாகவும் கருவில் இருந்த போது தினந்தோறும் இசையை கேட்டு வளர்ந்த அவர், பிறந்த நிலையில் இரண்டு மாத காலங்கள் ஓய்வெடுத்துக் கொண்ட ஷோபா சந்திரசேகர் மீண்டும் பாட ஆரம்பித்ததாகவும் எஸ்ஏசி மேலும் கூறியுள்ளார்.
கருவிலேயே சினிமாவிற்கு தயாரான விஜய்: அப்போது தான் முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டு விஜய்க்கு பீடிங் பாட்டில் மூலம் பால் கொடுத்து கொண்டு இருப்பேன் என்றும் அப்போதும் விஜய் இசையை கேட்டு வளர்ந்ததாகவும் கூறிய எஸ்ஏசி அப்போது தான் உதவி இயக்குனராக இருந்ததால் சம்பாத்தியம் இல்லை என்றும் தன்னுடைய மனைவியின் சம்பாத்தியம் தான் தங்களுக்கு சோறு போட்டதாகவும் கூறியுள்ளார். கருவில் இருந்த நிலையிலும் பிறந்த நிலையிலும் தொடர்ந்து பாடல்களை கேட்டு வளர்ந்த விஜய் அப்போதே சினிமாவில் பாடுவதற்கு தயாராகி விட்டதாகவும் எஸ்ஏசி மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாடல்கள் பாடும் விஜய்: தற்போதும் விஜய் தன்னுடைய படங்களில் தொடர்ந்து பாடல்களை பாடி வருகிறார். தன்னுடைய துவக்க கால படங்களில் இவரது பாடல் தனியாக பாராட்டுக்களை பெற்றன. தேவா இசையில் இவர் அதிக பாடல்களை பாடியுள்ளார். இதனிடையே, கடந்த மாதத்தில் ரிலீசான அவரது கோட் படத்தில் அடுத்தடுத்து இரண்டு பாடல்களை யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பாடல்களும் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளன.


Click it and Unblock the Notifications











