Sakkir Madathil: ரஜினிக்கு 400.. எனக்கு 40ஆ.. போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயிலர் இயக்குநர்!
திருவனந்தபுரம்: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படம் தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் மலையாளத்தில் ஜெயிலர் என்ற பெயரிலேயே ஆகஸ்ட் 10ம் தேதி சக்கீர் மாடத்தில் இயக்கத்தில் மலையாள படம் ரிலீசாகவுள்ளது.

ரஜினி படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மலையாள ஜெயிலர் பட இயக்குநர்: நடிகர் ரஜினிகாந்த, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகின்றன. படத்தின் நடிகர்கள், தமன்னா, வசந்த் ரவி, சுனில் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
மேலும் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர், இசை வெளியீடு போன்றவையும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா ஆட்டம் போட்டுள்ள பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஆடி, ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தமன்னா.
ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா படமாக படம் ரிலீசாகவுள்ள நிலையில், ஒவ்வொரு மொழியிலிருந்து சிறப்பான நடிகர்கள் படத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மலையாளத்தில் இருந்து மோகன்லால், ஜெயிலர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது வெளியான படத்தில் ட்ரெயிலரில், மோகன்லால் இடம்பெறவில்லை. அதனால் படத்தில் அவரது கேரக்டர் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மலையாளத்திலும் ஜெயிலர் என்ற படம் சக்கீர் மாடத்தில் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தன்னுடைய படத்தின் தலைப்பிலேயே ரஜினியின் படமும் வெளியானால், தன்னுடைய படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறி, கேரளாவில் மட்டும் ரஜினியின் படத்தின் டைட்டிலை மாற்றி வெளியிடும்படும் சக்கீர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை சன் பிக்சர்ஸ் நிராகரித்தது.
இதையடுத்து இந்தப் படத்தை நம்பிதான் தன்னுடைய எதிர்காலமே உள்ளதாகவும், தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ரஜினி மனது வைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் சக்கீர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்த், எந்தவிதமான ரியாக்ஷனையும் காட்டவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ் ஜெயிலர் மற்றும் மலையாள ஜெயிலர் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளன.
ஆனால் ரஜினியுடன் மோகன்லால் இணைந்துள்ள ஜெயிலர் படத்திற்கு கேரளாவில் 400 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் சக்கீரின் ஜெயிலர் படத்திற்கு வெறுமனே 40 திரைரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மலையாள சினிமாவை காப்பாற்றுங்கள் என்ற பதாகைகளுடன் சக்கீர் மாடத்தில் தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளதால் கேரளாவில் பரபரப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











