இந்த உடம்பை வைத்துக் கொண்டு ஓட முடியாது.. நடந்துதான் போனேன்.. ஜாலியோ ஜிம்கானா இயக்குநர்!
சென்னை: நடிகர்பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தை இயக்கியுள்ளார் சக்தி சிதம்பரம். படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்தப் படத்தின் போலீஸ்காரன கட்டிக்கிட்டா பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ள நிலையில், இந்தப் பாடலை சக்தி சிதம்பரம் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பாடலை பத்திரிகையாளர் ஜெகன் கவிராஜ் எழுதியதாகவும் அவரது பாடலுக்கு தன்னுடைய பெயரை சக்தி சிதம்பரம் போட்டுக் கொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான விளக்கத்தை தற்போது சக்தி சிதம்பரம் கொடுத்துள்ளார்.

ஜாலியோ ஜிம்கானா படம்: நடிகர் பிரபுதேவா மற்றும் மடோனா சபாஸ்டியன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் தான் இரவு பகல் பாராமல் மிகவும் கஷ்டப்பட்டு இசையமைப்பாளருடன் இணைந்து எழுதியதாக படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் பிரபுதேவா ஆகியோருக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக ஜெகன் கவிராஜ் பாடல்களை எழுதியதாக கூறியுள்ளது தற்போது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளாது.
பாதியில் வெளியேறிய இயக்குநர்: ஜாலியோ ஜிம்கானா படத்தின் போலீஸ்காரனை கட்டிக்கிட்டா பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, இந்தப் பாடலை பத்திரிகையாளர் ஜெகன் கவிராஜ் என்பவர் எழுதியுள்ளதாகவும் ஆனால் பாடலை தான் எழுதியதாக சக்தி சிதம்பரம் கூறுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோது, இயக்குநரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறு விஷயங்களை பேசிய அவர் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட நிலையில், அவர் அரங்கிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
நடந்துதான் போனேன்: இதையடுத்து மேடையில் பேசிய ஜெகன் கவிராஜ், இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் தான் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். படத்தின் பட்ஜெட் அதிகமாவது குறித்து தான் தயாரிப்பாளருக்கு கூறியதாகவும் இதனால் இயக்குநர் தன்மீது கோபப்பட்டு, பாடலாசிரியராக தன்னுடைய பெயரை போடவில்லை என்றும் ஜெகன் கூறியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் பேசியுள்ள இயக்குநர் சக்தி சிதம்பரம், மேடையிலிருந்து தான் பாதியிலேயே ஓடவில்லை என்றும் இந்த உடம்பை வைத்துக்கொண்டு ஓட முடியாது என்றும் நடந்துதான் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உழைப்பை சுரண்டவில்லை: மேலும் இந்தப் படத்தில் சினேகன், விவேகா போன்றவர்களும் பாடல்களை எழுதிய நிலையில், இயக்குநரான தனக்கு அந்தப் பாடல்கள் பிடிக்காததால் தானே பாடல்களை எழுதியதாக தெரிவித்துள்ளார். இதேபோலதான் ஜெகன் எழுதிய பாடல்களும் தனக்கு செட் ஆகாததால் அதை பயன்படுத்தவில்லை என்றும் சக்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய ஒரு சில வரிகளை பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆனால் அதற்காக அவர்தான் முழு பாடலையும் எழுதியதாக கிரெடிட் கொடுக்க முடியாது என்றும் சக்தி சிதம்பரம் காட்டம் தெரிவித்துள்ளார். தன்னுடைய இத்தனை ஆண்டுகால கேரியரில் அதிகமாக பார்த்துவிட்டதாகவும் மற்றவர்கள் உழைப்பை சுரண்டவேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











