ஜெயலலிதாவின் 'தலைவி'யில் இவர்தான் ஆர்.எம்.வீரப்பன்!
சென்னை: தலைவி படத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனாக, சமுத்திரக்கனி நடிக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மூன்று பேர் இயக்கி வருகின்றனர். கவுதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இணைந்து, குயின் என்ற வெப் சீரிசை இயக்கியுள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

நித்யா மேனன் நடிப்பில் பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா படத்துக்கு அயர்ன் லேடி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் கதையை இயக்கி வருகிறார். இதில் கங்கனா ரனவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். அரவிந்த் சாமி எம்ஜிஆராகவும் பிரகாஷ் ராஜ் கருணாநிதியாகவும் நடிக்கின்றனர். சசிகலாவாக பிரியாமணி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் சோபன் பாபுவாக நடிக்க, 'அர்ஜுன் ரெட்டி' ஹீரோ விஜய் தேவரகொண்டாவிடம் படக்குழு பேசியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகக் கூறப்படுகிறது. என்.டி.ராமாராவ் கேரக்டருக்கு, அவரது மகனும் தெலுங்கு ஹீரோவுமான பாலகிருஷ்ணாவிடம் பேசியுள்ளனர். இந்தத் தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், இந்தப் படத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனாக, சமுத்திரக்கனி நடிக்கிறார். 'எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்ததும் அவரது செயலாளர் போல் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அந்தக் கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அவருக்கும் எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த் சாமிக்கு முதல் பாதிவரை அதிகமான காட்சிகள் இருக்கின்றன' என்று படக்குழு தெரிவித்துள்ளது.
சமுத்திரக்கனியை, அயர்ன் லேடி படக்குழுவும் நடிக்கக் கேட்டதாம். ஆனால், அதில் மறுத்து, தலைவிக்கு ஓகே சொல்லியிருக்கிறார், கனி.


Click it and Unblock the Notifications











