சிவகார்த்திகேயனின் இன்னொரு முகம் இதுதான்... பிறந்தநாளில் உண்மையை சொன்ன பிரபல இயக்குநர்!
சென்னை: இன்று தனது 38வது பிறந்தநாள் கொண்டாடி வரும் சிவகார்த்திகேயனுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்காக மாவீரன் படத்தின் முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டு அசத்தியது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களின் இயக்குநர் சரவணன், நெகிழ்ச்சியான சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் குறித்த இயக்குநர் இரா சரவணனின் முகநூல் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்
கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இன்று 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிவாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாவீரன் படத்தின் முதல் பாடலும் வெளியானது. மேலும், சிவகார்த்திகேயனுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் இரா சரவணனும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் உதவும் குணம் குறித்து பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உதவிக் கேட்க தயக்கம்
அதில், "சினிமா சம்பந்தப்பட்ட ஓர் ஆளுமைக்கு திடீர் நெஞ்சு வலி. அப்பல்லோவில் அட்மிட். அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவை. அவர் பணியாற்றும் நிறுவனத்தினர் ஒருபுறம் போராட, நண்பர்கள் நாங்களும் திண்டாடினோம். இயக்குநர் ஹெச். வினோத் ஒரு லட்சம் கொடுத்தார். மற்றவர்களும் கொடுத்தார்கள். ஆனாலும், திரட்டிய தொகை போதவில்லை. "சார், நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுப் பார்க்குறீங்களா?" என என்னிடம் ஒருவர் சொல்ல, நான் சட்டென மறுத்துவிட்டேன்."

எப்போது கேட்டாலும் உதவி கிடைக்கும்
"காரணம், நான் சிவாவிடம் நிறைய கேட்டுவிட்டேன். அவரும் மறுக்காமல் செய்துகொண்டே இருக்கிறார். முடியாது என அவர் சொன்னதே இல்லை. அதற்காக எல்லாவற்றுக்கும் அவரிடம் போய் நிற்பது எனக்கு நியாயமாகப்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்தும் போதிய தொகையைத் திரட்ட முடியாத நிலையில், வேறுவழியே இல்லை. விஷயத்தைத் தம்பி சிவகார்த்திகேயனிடம் மொத்தமாகக் கொட்டித் தீர்த்தபோது, "நான் பார்த்துக்குறேன். தொகை முழுவதையும் நான் கட்டுறேன். என் பங்களிப்பை அவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். எல்லோரும் சேர்ந்து அவருக்காக நிற்பதாகவே இருக்கட்டும்..." என்றார் சிவா."

ஒரே காலில் பணம் வந்தது
"சட்டென ஒரேஒரு போனில் மொத்த பாரத்தையும் கைமாற்றிக்கொண்ட தம்பி சிவாவின் அன்பு கோடி பெறும். "திரட்டிய தொகை கையில் இருக்கிறது. தேவைப்படும் தொகையை மட்டும் மருத்துவமனைக்குக் கொடுத்தால் போதும் தம்பி..." என வற்புறுத்திச் சொன்னேன். "அவர் ரொம்ப முக்கியமான ஆள். பேசுறப்ப அவ்வளவு எனர்ஜி கொடுக்கிற மனிதர். ஹாஸ்பிடலில் பேசி அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செஞ்சு கொடுங்க..." என தம்பி நவநீதனை பணித்து, சிவா காட்டிய அக்கறை அந்த உதவியைவிட மேலானது. சிகிச்சையில் இருக்கும் அந்த ஆளுமையிடம் சிவாவின் வார்த்தைகளை அப்படியே சொன்னேன். குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். "என்னை இந்தளவுக்கு நினைவு வைச்சிருக்காரே..." என நெகிழ்ந்துப் போனார். சிவகார்த்திகேயன் போன்றவர்கள் உற்ற துணையாக நிற்பதுதான் அவருக்குப் பெரிய ஆறுதல்."

தொடரும் சிவகார்த்திகேயனின் உதவி
"நெல் ஜெயராமன் தொடங்கி நீட் பயிற்சிக்குப் போராடிய பூக்கொல்லை சகானா வரை எத்தனையோ பேருக்கு சிவகார்த்திகேயன் உதவி இருக்கிறார். பேருக்கு உதவினோம் என்றில்லாமல், தொடர்ந்து அவர்கள் குறித்து விசாரிப்பதும் மேற்கொண்டு உதவுவதுமாக சிவா காட்டும் அக்கறை உண்மையானது; பரிபூரணமானது. நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை இன்றளவும் ஏற்று வருகிறார் சிவா. இன்னும் பட்டியலிட நிறைய இருக்கின்றன. எதையும் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் எல்லாமும் செய்யும் அன்புத் தம்பி சிவகார்த்திகேயனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி - வைரலாகும் பதிவு
"ஒருவருடைய வெற்றியும் சம்பாத்தியமும் அவருக்கும் அவர் குடும்பத்துக்காகவும் மட்டுமே அல்லாமல், பலருக்குமான பலனாக அமைவது பெரிய சிறப்பு. அந்த வகையில் தம்பி சிவகார்த்திகேயன் எல்லோருக்குமான நம்பிக்கை!" என பதிவிட்டுள்ளார் இயக்குநர் இரா சரவணன். அவரின் முகநூல் பதிவை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நெகிழ்ந்ததோடு, அதனை சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











