டூரிஸ்ட் ஃபேமிலி உங்களை மாற்றும்.. சசிகுமாரை புகழ்ந்து தள்ளிய நந்தன் இயக்குநர்
சென்னை: சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. 24 வயதான அபிஷன் ஜிவிந்த் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் இப்படம் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. போட்டியாக களமிறங்கிய ரெட்ரோ திரைப்படம் சொதப்பியிருப்பதன் காரணமாக இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் படம் பற்றி நந்தன் படத்தை இயக்கிய இயக்குநர் இரா. சரவணன் நெகிழ்ச்சியுடன் முகநூலில் பகிர்ந்திருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான சசிகுமார் முதல் படத்திலேயே தான் ஒரு தரமான இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். அந்தப் படம் இன்றுவரை எல்லோராலும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஈசன் படத்தை இயக்கினார் சசி. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் சசிகுமாரின் மேக்கிங் எல்லோரையும் கவர்ந்தது. கண்டிப்பாக தொடர்ந்து இயக்குநராக பயணப்பட்டு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநராக அவர் வலம் வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார் சசிகுமார்.

பிஸியான நடிகர்: அப்படி அவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. பிறகு நடிக்கும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் முழு கவனத்தையும் செலுத்திய அவர் உடன்பிறப்பே, அயோத்தி, நந்தன், கருடன் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். அதிலும் அயோத்தி, நந்தன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. மேலும் அந்த இரண்டு படங்களும் இதுவரை யாரும் பெரிதாக பேசாத அல்லது பேச மறந்த விஷயங்களை பேசின. இரு படங்களிலுமே சசிகுமாரின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது என்றும்; கண்டிப்பாக இனிவரும் காலங்களில் அவர் தவிர்க்க முடியாத நடிகராக வருவார் என்றும் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு கூற ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டூரிஸ்ட் ஃபேமிலி: இப்படிப்பட்ட நிலைமையில் அவர் அபிஷன் ஜிவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி நடித்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க; யோகி பாபு, குழந்தை நட்சத்திரம் கமலேஷ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டபோதே இந்தப் படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. மேலும் கண்டிப்பாக டூரிஸ்ட் ஃபேமிலி Vs ரெட்ரோ போட்டியில் கண்டிப்பாக டூரிஸ்ட் ஃபேமிலிதான் வெல்லும் என்ற பேச்சுக்களும் வர ஆரம்பித்தன. அதன்படி கடந்த மே ஒன்றாம் தேதி வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கையில் இயக்குநருக்கு 24 வயது என்று நம்பவே முடியவில்லை; நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. இயக்குநருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

நந்தன் இயக்குநர் இரா. சரவணன் நெகிழ்ச்சி: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் பெரிய ரெஸ்பான்ஸை பெற ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் சசிகுமாரை வைத்து உடன் பிறப்பே, நந்தன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா. சரவணன் டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து நெகிழ்ச்சியோடு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், " எப்போதுமே சசிகுமார் சாரின் படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு, வாசலிலேயே நின்றுகொண்டு அவருக்கு போன் செய்வேன். அதுதான் வழக்கம். 'டூரிஸ்ட் ஃபேமிலி' பார்த்துவிட்டு சாரிடம் பேசவில்லை; யாரிடமும் பேசவில்லை. தியேட்டரிலிருந்து வீட்டுக்கு வந்து நிலைப்படியில் அமர்கிறேன். என்னை ஆசுவாசமாக்கிக் கொள்ளவே கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. நீள ஆறாக மனதுக்குள் பெருக்கெடுக்கும் உணர்வுகளைக் கண் கலங்காமல் சசிகுமார் சாரிடம் அப்படியே ஒப்பிக்க வேண்டும். கொஞ்சமும் கலங்கக்கூடாது. காரணம், அவர் பெருவெற்றி அடைந்திருக்கும் தருணம் இது. உற்சாகம், கைத்தட்டல், கொண்டாட்டம் என்றுதான் இனி அவர் முகத்தைப் பார்க்க வேண்டும். அவர் பட்ட பாடுகள் போதும்.
மனதை தவிர அனைத்தும் சேதாரம்: முதல் படத்திலேயே பன்முக வெற்றியை அவருக்குப் பரிசளித்த உலகம், ஆற்று வேகத்தில் சிக்கிய கூழாங்கல்லாய் அவரை எல்லாமும் செய்து பார்த்துவிட்டது. அவருடைய மனதைத் தவிர மற்ற யாவையும் சேதாரப்படுத்தியது. எந்தச் சூழலிலும் இரக்கம் மாறாத, பிறர் துயரம் பொறுக்காத அந்தத் தும்பை மனதுக்குத்தான் இத்தனை பெரிய வெற்றியை நீட்டி இருக்கிறது காலம். கதாநாயகப் பிம்பத்துக்கும் அவருடைய உண்மையான குணத்துக்கும் ஒத்துப்போகும் தன்மைதான் இந்தப் படத்தின் ஹீரோயிசம். "ஒருத்தன் பின்னால கூட்டம் கூடுதுன்னா ஒண்ணு பணம் இருக்கனும், இல்ல அதிகாரம் இருக்கனும். உங்களுக்கு மனசு இருக்கு சார்..." என ரமேஷ் திலக் பேசுகிற க்ளைமாக்ஸ் வார்த்தைகள் சசி சாருக்கான பட்டயம். எத்தகைய நிலையிலும் நெறிபிறழாத அவருடைய நேர்மைக்குக் கிடைத்த உச்சிமுகரல்.
இந்தப் படம் அப்படியெல்லாம் இல்லை: திரைப்படம் என்பது பல்வேறு மாயாஜாலங்களை, மிரட்டல்களை, வியப்புகளை விதைக்கிற களம் என்றுதான் நினைத்திருப்போம். இந்தப் படம் அப்படியெல்லாம் இல்லை. சக மனிதர்களைத் திரும்பிப் பார்க்கும் மிக இயல்பான பார்வை... கதாநாயகன் பக்கத்து வீட்டு இளைஞனுக்காகப் போர்க்குரல் எழுப்பவில்லை. போராடவில்லை. 'தம்பி, சாப்பிட்டீங்களா?' என்றுதான் கேட்கிறார். தாய்க்கு நிகரான அக்கறையாக மாறும் அந்த வார்த்தை, ஒரு இளைஞனின் வாழ்க்கையையே மாற்றுகிறது. இது ஒரு பருக்கை உதாரணம்... இதைப்போல் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் காட்சிகள் படம் முழுக்க அணிவகுக்கின்றன. 90 சதவிகிதக் காட்சிகளையும் ஹீரோவையே மையப்படுத்தி எழுதப்படுகிற காலகட்டத்தில், அன்பின் பெருவெளியில் அத்தனை பேரும் கதாநாயகர்கள்தான் எனக் காட்டி இருக்கிறார் புதுமுக இயக்குநர் தம்பி அபிஷன் ஜிவிந்த்.
சசிகுமார் கொடுத்த சர்ப்ரைஸ்: ஒருவழியாய் சசிகுமார் சாருக்கு போன் பண்ணினேன். "உங்க ஆபிஸ்க்குள்ளதான் நுழையிறேன்..." என்றார். பதறி ஓடிப்போய் சசி சாரின் கைகளைப் பற்றினேன். அருகே நின்ற இயக்குநர் தம்பி அபிஷனை நெஞ்சோடு கட்டிக் கொண்டேன். "யார் சார் இந்தப் பையன்... உங்களுக்குன்னே பிறந்து வளர்ந்து கதை எழுதியிருக்காப்புல..." என்றேன் சிலிர்த்துப்போய். அறைக்குள் அவர்களை அமர வைத்துவிட்டு வாசலுக்கு வந்தால், படத்தின் தயாரிப்பாளர் பேரன்புமிகு சொக்கத்தங்கம் யுவராஜ் வாசலில் நிற்கிறார். 'இந்தக் காலத்திலும் இப்படியொரு பிள்ளையா?' எனப் பார்க்கிற போதெல்லாம் நான் ஆச்சர்யப்படுகிற ஆள். ரிலீஸ் நாளில் எவ்வளவு வேலைகள் இருக்கும்... "சசி சார் அவர் படம் ரிலீஸாகும் போதெல்லாம் என்னைப் பார்க்க வருவார்... நீங்கள் எப்படி?" என்றேன்.
நான் வந்ததற்கு இதுதான் காரணம்: "பிரிவியூ தொடங்கி புரோமோஷன் வரைக்கும் எதுக்கு அழைச்சாலும் வர மாட்டேங்குறீங்க... அதான் நாங்களே வந்துட்டோம்" என்றார் தன் குழுவினரோடு. காலத்திற்கும் மறக்க முடியாத காவியத்தைக் கொடுத்தவர்களுக்கு மாலையிட்டு மரியாதை செய்து நெகிழ்ந்தோம். ஒரு வெற்றிக்காக எந்த வியூகங்களையும் வகுக்கத் துணிகிற இந்தப் பரபரப்பு உலகத்தில், மனிதத்தையும் அன்பையும் தாண்டி இந்த உலகில் வேறு எது வெற்றி பெற முடியும் என இயக்குநரும் தயாரிப்பாளரும் கதாநாயகனும் ஒருமித்து உணர்த்தி இருக்கிறார்கள். படம், ஒரு காவியமாக நம் எல்லோரையும் கலங்கடிக்கும் என்பதில் துளி சந்தேகமில்லை.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உங்களை மாற்றும்: இனி எதிர்ப்படுகிற மனிதர்களைப் பார்த்து நீங்களும் புன்னகைப்பீர்கள். 'சாப்பிட்டீங்களா?' என அக்கறையோடு கேட்பீர்கள். அக்கம் பக்கத்து வீடுகளின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்பீர்கள். எதையுமே செய்ய முடியாவிட்டாலும் உதடுகளில் எப்போதும் கொஞ்சம் புன்னகையை ஏந்துவீர்கள். 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் அந்தளவுக்கு உங்களை மாற்றும்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











