பெண்களின் பேரன்புதான் நம்மை இயக்குகிறது!- இயக்குநர் சசிகுமார்
பெண்களின் பேரன்புதான் நம்மை இயக்குகிறது. அவர்களைக் கொண்டாட ஒரு நாள் போதாது என்று நடிகரும், இயக்குநருமான சசிகுமார் கூறியுள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தி:
ஒரே ஒரு நாள் மட்டும் ஒதுக்கி பெண்களை நாம் கொண்டாடிவிட முடியாது. தாயாக, சகோதரியாக, தோழியாக எத்தனையோ பெண்கள் காட்டும் பேரன்பு தான் நம்மை இயக்குகிறது. நாம் சறுக்கும் போதெல்லாம் அவர்களின் அன்புதான் தாங்கிப் பிடிக்கிறது.

ஆணுக்கு நிகராக மட்டும் அல்ல, ஆண்களையே மிஞ்சுகிற அளவுக்கு இன்றைக்கு அத்தனைத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கிறார்கள்.
விவசாயம் தொடங்கி விண்வெளி வரை சகல திசைகளிலும் வியக்க வைக்கிறார்கள். ஆனால், இந்த நவீன யுகத்திலும் அடக்குமுறையும், பாலியல் கொடுமையும் தினம் தினம் நடப்பது இந்த சமூகத்தின் சகிக்க முடியாத வேதனை.
ஆண்களைப் பலமாகப் படைத்ததற்குக் காரணமே பெண்களைப் பாதுகாக்கத் தான்; பலாத்காரப்படுத்த அல்ல. பெண்களை அடக்கி ஆள நினைக்கும் மனோபாவம் இன்னமும் நம்மிடத்தில் இருந்து முழுதாகப் போகவில்லை.
விதை உடைத்து வெளியே வரும் தளிர்போல தலைமுறை தலைமுறையாகத் தொடரும் அடக்குமுறைகளைப் பெண்கள் இப்போதுதான் உடைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களைத் தட்டிக் கொடுக்கவோ, கைகுலுக்கவோ நம்மில் எத்தனை பேர் முன்வருகிறார்கள்? இணைய வளர்ச்சியைக்கூட, பிடிக்காத பெண்ணைப் பற்றி அவதூறு பரப்பும் அற்பத்துக்கே பயன்படுத்துகிறார்கள்.
எந்த விதத்தில்லும் நம்மில் எள் அளவும் குறைவில்லாத பெண்களை அவமானம், விமர்சனம் என வீழ்த்தியது போதும். அவர்களை நாம் கைதூக்கிவிட வேண்டிய தில்லை. சுயம்பாக எழுகிற அவர்களைப் பின்னோக்கி இழுக்காமல் இருந்தாலே போதும்.
பெண்ணாகப் பிறந்திருக்கும் அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள். கற்பழிப்புகளும், ஆசிட் வீச்சுகளும் இல்லாத உலகம் என்றைக்கு மலர்கிறதோ... அதுவே உண்மையான மகளிர் தினமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications